lundi 19 août 2013

இந்த உலகம் முழுவதும் நம் மனதிலேயே அடங்கியிருக்கிறது

இந்த உலகம் முழுவதும் நம் மனதிலேயே அடங்கியிருக்கிறது


 

புனித லீமா ரோஸ், அமெரிக்காவின் முதல் புனிதர். இவர் பெருநாட்டின் தலைநகரான லீமா நகரில் 1586ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்  ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்கள். இவரது ஞானஸ்நானப் பெயர் இசபெல்லா. இவரது முகம் ரோஜா மலரைப்போல் இருந்ததாலும் இவர்  குழந்தையாய் தொட்டிலில் கிடந்தபோது ஓர் அழகிய ரோஜா மலர் அந்தத் தொட்டிலில் விழுந்ததாலும் அவருக்கு ரோஸ் என்னும் பெயர் வந்தது  என்பார்கள்.

சிறுவயது முதல் தம் தந்தையின் தோட்டத்தில் ஒரு சிறு குடிசை அமைத்து அங்குபோய் ஜெபிப்பார். வாரத்தில் மூன்று நாள் வெறும் ரொட்டியும்  தண்ணீரும் மட்டும் உட்கொண்டு உபவாசம் இருப்பார். இடுப்பில் ஓர் இரும்புச் சங்கிலியும் தலையில் ஒரு முள்முடியும் அணிவார். தனது அழகு  மற்றவர்களுக்குச் சோதனையாக இருக்கக் கூடாது என்பதில் கண்டிப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருந்தார்.

‘எனது வேதனைகளையும் அதே நேரத்தில் உம்மீது எனக்குள்ள அன்பையும் அதிகமாக்கும்’ என்று இறைவனை வேண்டுவார். புனித சியன்னா  கத்தரீனம்மாளை மேல்வரிச்சட்டமாக வைத்து தவ வாழ்வு நடத்தினார். இளம் வயதிலேயே தன் கன்னிமையை கடவுளுக்கு அர்ப்பணம் செய்த இவர்  தொமினிக்கன் மூன்றாம் சபையில் சேர்ந்தார். இவர் பாவிகளின் பாவங்களுக்குப் பரிகாரமாகவும் உத்தரிக்கிற ஆன்மாக்களுக்கு ஆதரவாகவும் தனது  தவமுயற்சிகள் அனைத்தையும் ஒப்புக்கொடுத்தார்.

‘‘அன்பர்களே! நாங்கள் உங்களுக்குத் தரும் அறிவுரை இதுவே: சோம்பேறிகளுக்கு அறிவு புகட்டுங்கள்; மனத் தளர்ச்சியுற்றவர்களுக்கு  ஊக்கமுட்டுங்கள்; வலுவற்றோர்க்கு உதவுங்கள்; எல்லோரோடும் பொறுமையாய் இருங்கள்; எவரும் தீமைக்குப் பதில் தீமை செய்யாதவாறு  பார்த்துக்கொள்ளுங்கள்; உங்களுள் ஒருவருக்கொருவர் மட்டுமின்றி எல்லாருக்கும் எப்பொழுதும் நன்மை செய்யுங்கள். எப்பொழுதும் மகிழ்ச்சியாக  இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள்; உங்களுக்காக கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள்  வெளிப்படுத்திய திருவுளம் இதுவே. தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டாம். இறைவாக்குகளைப் புறக்கணிக்க வேண்டாம்.

அனைத்தையும் சீர்தூக்கிப் பாருங்கள். நல்லதைப் பற்றிக் கொள்ளுங்கள். தீமைகளையும் விட்டு விலகுங்கள். அமைதி அருளும் கடவுள் உங்களை  முற்றிலும் தூய்மையாகக்குவாராக. அவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்போது உங்களுடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும்  குற்றமின்றி முழுமையாகக் காப்பாராக! உங்களை அழைக்கும் அவர் நம்பிக்கைக்குரியவர். தூய முத்தம் கொடுத்து ஒருவரையொருவர் வாழ்த்துங்கள்.  நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக.’’(1 தெசலோனிக்கர் 5: 14-28) இவனை நம்பு அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். முதலில் நம்மிடத்திலேயே நாம் நம்பிக்கை வைப்போம்.

எல்லா ஆற்றல்களும் நமக்குள்ளே இருக்கின்றன. அதை உணர்ந்து அந்த ஆற்றலை வெளிப்படுத்துவோம். எந்த ஒரு சக்தியையும் புதிதாக உண்டாக்க முடியாது. ஏற்கனவே உள்ள மாபெரும் ஆற்றல்களை அடக்கி ஆள நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அவற்றை மனதின் வலிமை கொண்டு வெறும் சக்தியாக இருப்பதற்குப் பதிலாக ஆன்மிக சக்தியாக இருக்கச் செய்வோம். அடக்கப்படாமல் சரியான வழியில் செலுத்தப்படாத மனம் நம்மை மேலும் மேலும் என்றென்றைக்குமாக கீழே இழுத்துச் சென்று விடும். நம்மைப் பிளந்துவிடும்; அழித்து விடும். ஆனால் அடக்கப்பட்டு சரியான வழியில் செலுத்தப்பட்ட மனமோ நம்மைக் காத்து ரட்சிக்கும். நம்மை விடுதலை பெறச் செய்யும்.

நல்ல எண்ணம், தீய எண்ணம் இரண்டுமே தனித்தனியே வலிமை மிக்க ஆற்றலைப் பெற்றிருக்கிறது. நாம், நல்ல மற்றும் தீய எண்ணங்களின்  உரிமையாளர்களாக இருக்கிறோம். நாம் நம்மைத் தூய்மைப்படுத்தி நல்ல எண்ணங்களின் கருவியாக்கிக் கொண்டால் அவை நம்முள் நுழைகின்றன.  நல்ல ஆன்மா, தீய எண்ணங்களை எளிதில் ஏற்பதில்லை. நம்மிடம் கொடுப்பதற்கு ஏதாவது இருக்கிறதா? அப்படி இருந்தால் அதை மற்றவர்களுக்குக் கொடுத்துவிடுவோம். நாம் எதைச் செய்தாலும்  அதன்பொருட்டு நமது மனம், இதயம், ஆன்மா முழுவதையும் அதற்கு அர்ப்பணித்து விடுவோம். இப்போது நாம் வாழும் வாழ்க்கையில் தூய்மையை எப்படி பெறுவது? மனம் கட்டுப்பட்டு அடங்காவிட்டால் எந்தப் பயனும் கிடைக்காது.

ஏனென்றால் இதே மனம் எல்லா தொந்தரவுகளையும் கொண்டுவந்து சேர்த்துவிடும். எல்லாப் பேய்களும் நமது மனதிலேயே இருக்கின்றன. கட்டுப்பட்டு மனம் அடங்கியிருந்தால் நாம் எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடம் அமைதியாக ஆகிவிடும். நமது சொந்த மனப்பான்மைதான் நமக்கு ஏற்றாற்போல் உலகத்தைத் தோன்றும்படி செய்கிறது. நமது எண்ணங்களே பொருள்களுக்கு அழகு சேர்க்கின்றன. நமது எண்ணங்களே பொருள்களை அவலட்சணமாக்குகின்றன. இந்த உலகம் முழுவதும் நமது சொந்த மனதிலேயே அடங்கியிருக்கிறது. நல்ல மனதில் விரியும் இரு மலர்கள்தான் அமைதியும் மகிழ்ச்சியும். நல்ல மனம் விரைவில் தளராது. சோதனைகள் நம்மை இறைவனோடு நல்லுறவு கொள்ளச் செய்யும்.

 ‘‘உன் துன்ப துயரத்தின் ஆடைகளைக் களைந்து விடு; கடவுள் உனக்கு அருளும் மாட்சியின் பேரழகை என்றென்றும் அணிந்துகொள்’’ என்கிறார் ஆண்டவர். மனிதர் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்பதுதான் இறைவனின் எண்ணம். ஆனால் உலகில் வாழும்போது சில துன்பங்களும் துயரங்களும் சோதனைகளும் கவலைகளும் தோன்றுவது இயற்கையே. அவ்வேளையில் ஆண்டவரிடம் நம்பிக்கை விசுவாசம் வேண்டும். ‘‘சோர்ந்த உள்ளங்களுக்கு நான் புத்துயிர் அளிப்பேன்; வாடிய நெஞ்சங்களுக்கு நான் நிறைவளிப்பேன்’’ என்ற ஆண்டவர் எப்போதும் நம்மோடு இருக்கிறார்.
நாம் நம் குழந்தைகளை எவ்வளவு நேசிக்கிறோம்!

அவர்களிடம் எந்த அளவுக்கு பாசம் வைத்துள்ளோம்! நம்மேல் அன்பு வைத்திருக்கும் கடவுள் அவர் குழந்தைகளாகிய நம்மைக் கைவிடுவாரா? ‘‘தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்’’ என்று சொன்ன ஆண்டவர் நம்மை அரவணைக்காமல் விடுவாரா? சாதகமோ பாதகமோ எச்சூழ்நிலையிலும் நாம் இறைத்திட்டத்தை அறிந்துகொள்ள ஆர்வம் கொள்ள வேண்டும். ஏனென்றால் ஆண்டவர் பின்வருமாறு கூறுகிறார்: ‘‘என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல; உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல; மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்து இருக்கின்றன’’ (ஏசாயா 55: 8-9) கடவுளுக்கு நம்மைக் குறித்து எண்ணமுண்டு. நாம் நம் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் குறித்து சிந்திப்பதுபோல கடவுளும் தம் பிள்ளைகளான நம்மைக் குறித்துச் சிந்திக்கிறார்.

‘‘உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியும் அன்றோ! மேலும் அவை வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையையும்  உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களே அன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல’’ என்றும் கூறுகிறார். விழிப்பாய் இருந்து  நம் இதயத்தைக் காவல் செய்வோம். ஏனெனில் அதனின்று பிறப்பவை நம் வாழ்க்கையின் போக்கை உறுதி செய்யும். நல்ல மனதுடையோர்  அமைதியையும் மகிழ்ச்சியையும் உரிமைப் பேறாகப் பெற்றுகொள்வர்.

-‘‘மணவைப்பிரியன்’’ஜெயதாஸ் பெர்னாண்டோ

Aucun commentaire:

Enregistrer un commentaire

ANY ERROR SHOULD BE INFORMED BY EMAIL