மேனார்டு கீன்ஸ், ஜோசப் ஷூம்பீட்டர் ஆகிய இரண்டு பொருளியலார்களும்
முதலாளித்துவம் இருப்பதற்கான அறிவுபூர்வ காரணத்தை நிலைநாட்டப் பெருமுயற்சி
எடுத்துக் கொண்டனர். முதல் உலகப் போர், பொருளாதாரப் பெருமந்தம், இரண்டாம்
உலகப் போர் ஆகியவற்றால் வரலாறு காணாத வகையில் முதலாளித்துவத்திற்குச்
சிக்கல் ஏற்பட்டபோது, இவர்கள் இருவரும் அதற்கு விளக்கம் கூறினர். சோவியத்
யூனியனில் சோசலிச அமைப்பு உருவாகி வந்த நிலையில் இரண்டாம் உலகப் போருக்குப்
பின், சிந்தாந்த பொருளாதார ரீதியாகத் தன்னை மீண்டும் நிலை நிறுத்திக்
கொள்ள வேண்டிய கட்டாயம் முதலாளித்துவத்திற்கு ஏற்பட்டது. சித்தாந்தத்
தேவைகளைப் பொருத்தவரையில் கீன்ஸ், ஷூம்பீட்டர் ஆகிய இருவரும் மிகத்
திறமையாக அதனைச் செய்தனர். அவர்களிருவரும் முதலாளித்துவப் பொருளாதார
கருத்தமைவுகளில் சிறந்தவற்றை எடுத்துரைத்தவர்கள் மட்டுமல்ல, முதலாளித்துவப்
பொருளாதார விஞ்ஞானத்தின் தலைசிறந்த பிரமுகர்களும் ஆவர். தங்களது
பகுப்பாய்வுகளில், அறிவு சார்ந்த ரீதியில் முதலாளித்துவத்தின் தேவைகளை
எடுத்துரைத்தார்கள். அந்தத் தேவைகள் அடையப்படக் கூடியவைதான் என்ற
நம்பிக்கையையும் ஏற்படுத்தினார்கள்.
நாம் கீன்ஸைப் பற்றி முதலில் பார்க்கலாம். அவர் இங்கிலாந்தில்
கேம்பிரிட்ஜில் படித்தவர். முதலாளித்துவத்தின் முரண்பாடுகளை அவர்
உணர்ந்திருந்தார். அவை அறிவு சார்ந்த மேலாண்மைக்கு உட்பட்டவை என்று
நம்பினார். முதலாளித்துவ நாடுகளுக்கிடையிலான உறவுகள், பொருளாதாரக் குவியல்
முறையில் ஏற்படும் உள்முரண்பாடுகளைச் சிர் செய்தல் ஆகியவற்றைப் பற்றிக்
கவலைப்பட்டார். பொருளாதாரப் பெருமந்தம் ஏற்பட்டபொழுது, சேயின் விதியைப்
புறக்கணித்து, தனது மாபெரும் படைப்பான வேலைவாய்ப்பு, வட்டி, பணம் பற்றிய
பொதுவிதி" என்னும் நூலை (1936) எழுதினார். (தனக்கு வேண்டிய தேவையை
வினியோகம் உருவாக்கிக் கொள்கிறது என்று மரபு வழி வினியோகஸ்தர்கள்
கருதுகிறார்கள் என்பது சே. விதி). அந்த பொருளாதார நூலில்
முதலாளித்துவத்தின் கீழ் பொருளாதாரக் கட்டுமானத்திற்கு ஏற்பட்டுள்ள
நெருக்கடிகளின் தன்மை பற்றியும் அவற்றை அரசுகள் எவ்வாறு எதிர் கொள்ள
வேண்டுமென்பது பற்றியும் முதன் முதலாக வெளியாயின. அரசு தலையிட்டு, முழுவேலை
உத்திரவாதத்திற்கான சாதகநிலைகளை உருவாக்குவதுதான் தக்க பதில் என்று கீன்ஸ்
எண்ணினார். அவர் காலத்து உலகமய செல்வாக்கிற்கேற்ப, கட்டுப்பாடற்ற வணிகத்தை
சிர் செய்வதும், ஓரளவு தேசிய சுய நிறைவடைவதும் அவசியமென வற்புறுத்தினார்.
அவர் காட், சர்வதேச நிதியம், உலக வங்கி ஆகியவற்றை உருவாக்கி உலக வணிகம்
மற்றும் நிதியமைப்பை நிலைப்படுத்தும் தன்மையிலமைந்த பிரட்டன் உட்ஸ்
கோட்பாட்டின் முக்கிய கர்தாக்களில் ஒருவர். பொதுவாக கீன்ஸ் கோட்பாடானது,
சமூக ஜனநாயகம், மக்கள் நல அரசு ஆகியவையெல்லாம் முதலாளித்துவத்தின் அறிவு
சார்ந்த வெளிப்பாடு என்று குறிப்பிடுவதாக நம்பப்படுகிறது. மூலதனத்திற்கும்
தொழிலுக்குமிடையே அரசியல் சமரசத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு
மறுசிராக்கத்திற்கு அது கட்டியம் கூறுவதுபோல் தெரிகிறது.
1930ல் ஏற்பட்ட பொருளாதாரப் பெருமந்தத்தின் தொடக்கத்திலேயே, "நமது
பேரப்பிள்ளைகளுக்கான பொருளாதாரச் சாத்தியங்கள்" என்ற ஒரு கட்டுரையை கீன்ஸ்
எழுதினார். அதில் வளமான சமுதாயங்களில் ஒவ்வொருவரின் வாழ்வாதாரத் தேவைகளைப்
பூர்த்தி செய்து கொள்வதற்கான பொருளாதாரப் பிரச்சினைகள் இன்னும் நூறு
ஆண்டுகளில் தீர்க்கப்பட்டு விடும் என்று கூறியிருக்கிறார். அதற்குப் பிறகு,
வேலை என்பது நாளொன்றுக்கு மூன்று மணி நேரம், வாரத்திற்கு பதினைந்து
மணிநேரம் என்று குறைந்துவிடுமாதலால், ஓய்வு நேரத்தை எவ்வாறு செலவிடுவது
என்பது பிரச்சினையாக இருக்கும் அந்த நிலையில், "பொருளாதாரத் தேவை என்னும்
இருட்குகையிலிருந்து சமுதாயத்தை வெளிக் கொணர" புதிய நெறிமுறைகள்
உருவாக்கப்படும் என்று கருதினார். இருந்தாலும் அது வரை "நேர்மையே தீமை,
தீமையே நேர்மை" என்னும் நீதிக்கு மாறான நெறிமுறைகளையே உலகம்
கைக்கொண்டிருக்கும். அதாவது சொத்துக்குவிப்பிற்கு ஆதாரமான பேராசை, சுரண்டல்
ஆகியவற்றோடு இயங்கும்.
ஷூம் பீட்டர், அமெரிக்காவிலுள்ள ஹாவர்டில் கற்றவர். ஒரு பழமை விரும்பி.
கீன்ஸ் மற்றும் கீன்ஸின் கோட்பாடுகளை எதிர்ப்பவர். முதலாளித்துவத்தின
சாரமாக, அறிவுசார் தொழிலதிபர்கள் என்னும் கருத்தை வலியுறுத்துபவர். இன்னும்
ஏகபோகம் அதிக வளர்ச்சி பெற்றால், அதுவே முதலாளித்துவத்தின் முடிவிற்கு
இட்டுச் செல்லும் என்பதை அழுத்தமாகக் கூறியவர். முதலாளித்துவக்
கட்டமைப்பில் ஏற்படும் நெருக்கடிக்குக் கூறப்படும் கருத்துக்களை எதிர்த்து
வாதிட்டவர். முதலாளித்துவமானது பொருளாதாரக் காரணங்களினால் பொருளாதாரத்
தேக்க நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று கீன்ஸின் முதன்மைச்
சிடரான ஆல்வின் ஹான்சன் (அமெரிக்கர்)னின் வாதத்தைக் கடுமையாக எதிர்த்து
முதலாளித்துவத்தின் பிரச்சினைகள் சமுதாயம் சார்ந்தவை என்றார்.
அறிவுசார்ந்த பொருளாதார அமைப்பாக முதலாளித்துவம், சமகாலத்தில் தோன்றிய
ஏகாதிபத்தியத்திற்கு எதிரானதாக இருப்பதாகவும் ஷூம்பீட்டர் வாதிடுகிறார்.
அது கடந்த காலத்தில் போர் எந்திர வளர்ச்சியால் ஏற்பட்டதுபோலவும், பொருளாதார
வகையில் கூறுவதானால், ஏகபோக பெரும் வர்த்தக அமைப்புகள் பெருகியதால்
ஏற்பட்டது போலவும் இருப்பதாகக் கூறுகிறார்.
"ஏகாதிபத்தியங்களின் சமூகவியல்" (1919) என்னும் தனது நூலில்,
முதலாளித்துவம் இயல்பாகவே ஏகாதிபத்தியத்திற்கெதிரானது. நடைமுறையில் உள்ளது
போன்ற ஏகாதிபத்தியப் போக்குகள், முதலாளித்துவமல்லாத கூறுகளின் ஆதரவுடன்
வெளியிலிருந்து முதலாளித்துவ உலகினுள் கொண்டு வரப்பட்ட அயல் கூறாகவே
பார்க்க முடிகிறது என்றார்.
அறிவுசார்ந்த முதலாளித்துவம் பற்றிய இதுபோன்ற மாயையானது, இரண்டு
பொருளாதார வல்லுநர்களின் மூளையிலிருந்து வெறுமனே உதித்துவிடவில்லை. உலக
வேலையளவில் பாதியையும், உலக உற்பத்தியில் 60 சதத்தையும், தங்கத்திற்கு
நிகராகக் கருதப்பட்ட செலாவணி நாணயத்தையும் அணு ஆயுதத்தில் ஏகபோகத்தையும்
கொண்டு, இரண்டாவது உலகப் போரினின்றும் பாதிப்பேயில்லாமல் வெளிவந்த
அமெரிக்காவின் தலைமையில் மீட்கப்பட்ட முதலாளித்துவ காலத்து உணர்வுகளையே
அந்த மாயை பிரதிபலித்தது. இரண்டாவது உலகப் போருக்குப் பின்னால் மிக வலுவான
பொருளாதார, அரசியல், ராணுவ பலத்தைக் கொண்டிருக்கும் அமெரிக்கா, இந்த
முதலாளித்துவ அறிவுசார் தன்மையை ஆதரித்து நிற்பதுபோல் நடத்தது. சர்வதேச
வியாபாரம் மற்றும் நிதியத்திற்காக பிரிட்டன் வுட்ஸ் அமைப்பு
உருவாக்கப்பட்டதும் நியூயார்க்கில் புதிய ஐக்கிய நாடுகள் சபை
நிறுவப்பட்டதும், ஒரு வித்தியாசமான, மிகவும் நிலையான
முதலாளித்துவத்திற்குக் கட்டியம் கூறுவதுபோல் காட்டப்பட்டது.
கைப்பற்றப்பட்ட ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளோடு கடைப்பிடிக்கப்பட்ட
சாதகமான அணுகுமுறையும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் தங்களது பொருளாதாரத்தைப்
புனரமைத்துக் கொள்ள உதவும் வகையில் மார்ஷல் திட்டத்தை அமல்படுத்தியதும்,
புதிய உலக அதிகார மையத்தின் இரக்க மனப்பான்மைக் காட்டுவதுபோல் தெரிந்தன.
அட்லாண்டிக் ஒப்பந்தத்தை அமெரிக்கா ஏற்படுத்திக் கொண்டது. அதற்கு மேலே,
அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையே முக்கூட்டு
ஒப்பந்தமும் செய்து கொண்டது. மேற்கு ஐரோப்பாவில் சமூக ஜனநாயகமானது,
மூலதனத்தோடு பரஸ்பர நட்புறவை வலுப்படுத்திக் கொள்வதாகவும்,
மகிழ்ச்சியுடையதாகவும் செழித்திருந்தது. மக்கள் நல அரசின் வளர்ச்சியானது,
புதியதாக உருவாக்கப்பட்ட முதலாளித்துவத்தின் சின்னமாக விளக்கப்பட்டது.
ஐரோப்பிய, ஜப்பானிய பொருளாதாரங்கள் வேகமாக புனரமைக்கப்பட்டன. புதிய
பொற்காலத்திற்குக் கட்டியம் கூறும் மிக வேகப் பொருளாதார வளர்ச்சியானது,
முதலாளித்துவத்தின் சிறந்த தொடக்க நாட்களை நினைவுபடுத்துவதாக இருந்தது.
மூன்றாம் உலக நாடுகளில் பெருகிவந்த காலனி ஆதிக்க எதிர்ப்பு இயக்கங்கள்,
புரட்சிகள் ஆகியவற்றின் விளைவாக ஐரோப்பிய காலனியாதிக்கம் பின்னடைவைச்
சந்தித்தது. காலனியத்திற்கு எதிரான சக்தியாகத் தன்னைக் முன்னிறுத்திக்
கொண்ட அமெரிக்கா, பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் புதிய வளர்ச்சி
சித்தாந்தத்தை ஆதரித்து ஊக்கமளித்தது.
இரண்டாவது உலகப்போர் முடிந்து இருபது ஆண்டுகளில் பொருளாதாரத்திற்கு
முதல் நோபல் பரிசு பெற்ற பால் சாமுவேல்சன் போன்ற அமெரிக்காப் பொருளாதார
வல்லுநர்கள், வர்த்தகச் சுழற்சி முடிவிற்கு வந்துவிட்டதாக அறிவித்தார்கள்.
அமெரிக்காவில் உள்ள சிந்தனையாளர்கள், அமெரிக்காவில் மேலாதிக்கத்திற்குச்
சாதகமான புதிய யுகம் தோன்றியிருப்பதைக் குறிக்க, இது அமெரிக்காவின்
நூற்றாண்டு என்று குறிப்பிட்டார்கள். மேலை நாடுகளிலுள்ள சமூக விஞ்ஞானிகள்,
இந்த அறிவு சார்ந்த, நடைமுறை சார்ந்த முதலாளித்துவ அமைப்பைக்
கொண்டாடினார்கள்.
அமெரிக்காவில், மெக்கார்தியிசம் என்ற பெயரில் நடைபெற்றுக் கொண்டிருந்த
கம்யூனிச எதிர்ப்பு நரவேட்டை நடவடிக்கைகள் "தொழிலாளர் - மனித உரிமை
ஆதரவாளர்கள் - சிறு விவசாயிகள்" ஆகியோரின் புதிய கூட்டு முயற்சியின்
முதுகெலும்மை முறித்துக் கொண்டிருந்தது.
ஏகபோக முதலாளித்துவத்தின்கீழ், கீன்ஸ், ஷூம்பீட்டர் ஆகியோர் உருவாக்கிய
அறிவு சார்ந்த முதலாளித்துவத்தின் எந்தக் குணாம்சமும் இன்று பொருந்துவதாக
இல்லை. முதலாளித்துவத்தின் ஏகாதிபத்தியப் போக்கு கொஞ்சமும் குறையவில்லை.
பதிலாக, இராணுவத் தன்மையும் ஏகாதிபத்தியப் போக்கும், முன்னெப்போதும் இல்லாத
அளவு பொருளாதாரச் செயல்பாடுகளில் இணைந்து அதன் அன்றாடச் செயல்பாடுகளில்
இரண்டறக் கலந்து ஊடுருவியிருக்கிறது. ஆசியா மற்றும் பிற பகுதிகளில், போரின்
மூலமே அமெரிக்காவின் மேலாதிக்கம் நிறுவப்பட்டிருக்கிறது. பயனுள்ள
கோரிக்கைகளை மக்கள் அரசின் மூலம் நிறைவேற்றுவது, நாட்டு வருமானம், நிதி
ஆகியவற்றைச் சிரமைப்பது - இவை கீன்சிய முத்திரையாகும் - ஆகியவை
அழிக்கப்பட்டு விட்டன.
ஏகபோக முதலாளித்துவ அமைப்பு, தனது ஆற்றல்மிக்க முரண்பாடான வழிகள்
அனைத்தையும் கரைசேர முயற்சித்தும், அதனால் நெருக்கடியில்லாமல்
தொடர்ந்திருக்க முடியவில்லை என்பது பாரன், ஸ்வீஸி ஆராய்ச்சியின் மையக்
கருத்தாகும். தேக்க நிலைக்கான சக்திகள், தங்களை மீண்டும் உறுதிப்படுத்திக்
கொள்ள தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றன. 1970களின் தொடக்கத்தில், மிக
மோசமான பொருளாதார நெருக்கடியில் மீண்டும் அமெரிக்கா சிக்கிக் கொண்டது.
திரும்பவும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியானது. எண்ணெய் உற்பத்தி செய்யும்
நாடுகள் எடுத்த நடவடிக்கைகளால் எழுந்த நெருக்கடியுடன் சேர்ந்து கொண்டதாலும்
அமெரிக்காவின் மேலாதிக்கம் வீழ்ச்சியடைந்தது. அமெரிக்காவை மையமாகக் கொண்ட
மொத்த உலகப் பொருளாதார அமைப்பும் நிலையற்றதாகிக் கொண்டிருந்தது.
1970களின் ஆரம்ப காலத்து நெருக்கடிகள், வியட்நாமில் அமெரிக்கா அடைந்த
தோல்வி காரணமாக, மேலும் சிக்கலுக்குள்ளாகியது. டாலரின் நிலையில் மோசமான
ஏற்றத் தாழ்வுகளை அந்த யுத்தம் ஏற்படுத்தியது. பெருமளவு டாலர் பிற
நாடுகளுக்குச் சென்றது. மிகப்பெரிய யூரோ-டாலர் சந்தை உருவாக ஏதுவாயிறறு.
1971ல் நிக்ஸன் தங்கத்திலிருந்து டாலரைத் தொடர்பற்றதாக்கியதால் டாலர் -
தங்க ராஜ்ஜியம் முடிவுக்கு வந்தது. பிற நாடுகளில் தனது மேலாதிக்கத்தை
அதிகப்படுத்தி பொருளாதாரப் பிரச்சினைகளைச் சமாளிக்க, யுத்த யந்திரங்களைத்
தொடர்ந்து பயன்படுத்தும் அமெரிக்காவின் ஆற்றலுக்கு, வியட்நாமில் ஏற்பட்ட
யுத்த தோல்வி, கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியது.
உலக உற்பத்தியில் தனி நபர் வளர்ச்சி விகிதமானது, 1960களில் இருந்ததைவிட
1970களில் குறைந்தது. பிரச்சினை அதோடு தீர்ந்துவிடவில்லை. 1970களைக்
காட்டிலும் 1980களில் குறைவாகவும், 1980களைக் காட்டிலும் 1990களில்
குறைவாகவும், 1990களைவிட 2000களில் குறைவாகவும் அது தொடர்கிறது. அமெரிக்கப்
பொருளாதார மற்றும் பிற வளமான நாடுகளின் பொருளாதார அனுபவங்கள், பல
பத்தாண்டுகளாக தேக்க நிலை அதிகரித்துவரும் உலகப் பொருளாதாரத்தோடு முழுமையாக
ஒத்திருக்கின்றன
முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தில் 1970களிலும் 1980களிலும் நிறையப்
பதங்கள் உருவெடுத்தன. அவை இப்போது மிகவும் பழகிவிட்டன. அவை மறுகட்டமைப்பு,
தாராளமயம், தனியார் மயம், சுதந்திரச் சந்தை, உலகமயமாக்கல், முதலியன. உலக
முழுவதும், கூலியைக் குறைத்தல், சங்கங்களை உடைத்தல், தொழிலாளர்களுக்கான
அரசு ஆதரவையும் நுகர்வோருக்கான மானியத்தையும் விலக்குதல், மூலதனமும் இடம்
பெயர்வதற்குள்ள தடைகளை நீக்குதல், சொத்து, வருவாய் ஆகியவற்றை மேலிருந்து
கீழ்வரை அனைவருக்கும் மீண்டும் பகிர்ந்தளித்தல் போன்ற நடவடிக்கைகளே இறுதிக்
குறிக்கோளாகின. வேலைவாய்ப்பு, உடல்நலம், கல்வி, ஓய்வுப் பயன், உணவு
கிடைத்தல், சுற்றுப்புறம் போன்ற அடிப்படைப் பிரச்சினைகளை தடையேதுமில்லாத
முதலாளித்துவம் ஏற்றுக் கொண்டது. கீன்ஸ் மற்றும் ஷூம்பீட்டர் போன்ற
சிந்தனாவாதிகளுடன் தொடர்புடைய அறிவுசார்நிலை என்னும் அனுமானம் -
அவர்களுக்கு முன்னாலிருந்த மேக்ஸ் வெபர் என்னும் சமூக வியலாளர்
முதலாளித்துவத்தை முரண்பட்ட மனக்கிளர்ச்சியின் அறிவுசார்ந்த மனநிலை என்று
வர்ணித்தது எல்லாம் திடீரென்று பழங்கனவாய் போனது.
முதலாளித்துவப் பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சியுற்றும் கூட, சந்தையின்
பாலுள்ள வெற்று நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. இரண்டாவது
உலகப் போருக்குப் பிந்திய காலத்திலிருந்ததை விட, முதலாளித்துவம் மிகவும்
தாழ்ந்த நிலையிலேயே இப்போது இருக்கிறது. சமுதாயத்தின் கீழ் மட்டத்திலுள்ள
வர்க்க அமைப்புக்கள் முன்னைவிட மிகவும் வலிமை குன்றியிருக்கிறது. இது
நேரடியாகச் சுரண்டும் அமைப்பாக மாறிவிட்டது. அது நாடுகளின் வலிமையை
அதிகரிக்கவிட்டாலும், உயர்மட்டத்திலுள்ளவர்களை கொழுக்க வைத்திருக்கிறது.
அதற்கேற்ப ஆளும் வர்க்கத்தின் ஆட்சிச் சித்தாந்தங்கள் மாறுகின்றன.
சோவியத் யூனியனின் சிதைவால் ஏற்பட்ட வெற்றிடத்தைத் தனக்குச் சாதகமாகப்
பயன்படுத்தி தன்னை மீண்டும் நிலை நிறுத்திக் கொண்டு தனது உலக மேலாதிக்கத்தை
விரிவுபடுத்தவும் அமெரிக்கா முயற்சிக்கிறது. ஷூம்பீட்டரைப் பொருத்தவரை,
முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த குணங்களை விட, யுத்தம் மற்றும் ஏகபோகத்தின்
விளைவாகத்தான் ஏகாதிபத்தியம் தோன்றியது என்று கூறினாலும் கூட,
எதார்த்தத்தில் இந்த வேறுபாடுகள் தவறாகவே உள்ளன. உலக முதலாளித்துவ
அமைப்பின் வலிமை வாய்ந்த அரசாகத் தன்னைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும்
அமெரிக்கா, தனது பொருளாதார அரசியல் மேலாதிக்கத்தை இராணுவத்தின் மூலம்
நிலைநிறுத்திக் கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதை வெளிப்படையாகவே
வெளியுலகத்திற்குப் பறைசாற்றவும் செய்கிறது. இந்தப் பிரகடனத்தை வெளியிட்ட
கையோடு, ஈராக்கின் மீது படையெடுக்கும் திட்டத்தையும் அறிவித்தது.
உலகத்திலேயே தோண்டி எடுக்கப்படாத அதிக எண்ணெய் உற்பத்தி விரிவாக்கத்திற்கு
மிக அதிக வாய்ப்பு உள்ள நாடு. அந்த நாட்டில் இல்லாத பேரழிவு ஆயுதங்களைத்
தேடிக் கண்டுபிடிக்கும் சாக்கில் உள்ளே நுழைந்தது. ஒரு சில மாதங்களில்
உள்ளே நுழைந்த அமெரிக்கா, போரைத் தொடர்ந்து கொண்டே நீண்டகாலமாக அங்கேயே
தங்கிவிட்டது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவது அந்நாட்டின்
உரிமையாயிற்று. 2001 ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதல்
உலகத்தின் பெரும் பகுதியைக் காட்டுமிராண்டிகளின் கூடாரமாக்கிவிட்டது.
அவற்றை தனக்கு அடங்கி நடக்கும் சிறு நாடுகளோடு கூட்டணி அமைத்து அமெரிக்கா
மேலாதிக்கம் செய்கிறது.
முந்திய காலத்தில் முதலாளித்துவத்தைப் போலவே மிகப் பழமை வாய்ந்தது ஊக
மூலதனம். இது தேசியப் பொருளாதாரத்தையே மேலாதிக்கம் செய்யுமளவுக்கு வளரும்
என்று உலகில் யாருமே கனவுகூடக் காணவில்லை. ஆனால் இது வளர்ந்திருக்கிறது
ஸ்வீஸியின் கருத்துப்படி, மிகப் பெரும் கூட்டு நிறுவனங்களிலிருந்து
அதிகாரத்தை நீக்கி, அவற்றை நிதிச் சந்தைகளில் ஈடுபடுத்துவதில் அது முடியும்
(நிதிச் சந்தைகளில் பெரும் கூட்டு நிறுவனங்களே முக்கிய பங்காளர்களாவர்).
ஆடம்ஸ்மித்தின் மறைமுக ஆதிக்கம், புதிய வடிவில் அதிக வலுவோடு
புத்துயிர்ப்புப் பெறவதாக ஸ்வீஸி கூறினார். உலகம் தழுவிய ஏகபோக
முதலாளித்துவத்தின் இயல்பான வளர்ச்சியாகிய உலகளாவிய நிதி மூலதனத்தின்
ஆதிக்கம் இப்போதுதான் உள்ளது.
ஒரு பக்கத்தில் பட்டினி, ஏற்றத்தாழ்வுகள்; மற்றொரு பக்கத்தில், "தீமையே
நேர்மை" என்று கீன்ஸ் பசப்பிய கருத்தியல். வாழ்வுக்கான பொருளாதார நிலைமைகள்
மிக மோசமாகி வருகின்றன.
சுருங்கச் சொன்னால், மூலதனக் குவிப்பு என்னும் சந்தைப் பொருளாதாரத்தை
நோக்கி எல்லாமே திரும்பிவிட்ட இந்த உலகில், மனித சமுதாயத்தையும்
இப்பூவுலகையும் பிரிக்கிற, பாதிக்கிற அடிப்படைப் பிரச்சினைகள் மேலும்
மோசமடையவே செய்யும்.
"ஒழுங்கமைந்த முதலாளித்துவம்" என்பதன் மூலம் சமகாலத்தில், அரசு
தலையீடுகளினால் உருவாக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட நடைமுறைகள்,
தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சிக்கு உறுதி செய்திருப்பதையும்
உள்ளுக்குள்ளே உருவாக்கப்பட்ட சமூக, அரசியல் நெருக்கடிகள் நீக்கப்பட
முடியாவிட்டாலும் குறைக்கப்பட்டிருப்பதையும் உணருகிறோம் என்ற வாதங்களை
தாராளமய சிர்திருத்தங்கள் பொய்யாக்கி விட்டன. கீன்ஸீம், ஷூம்பீட்டரும்
அறிவு சார்ந்த முதலாளித்துவத்தின் மேலுள்ள தங்களது மூடநம்பிக்கையைப்
படரவிட்டு, முதலாளித்துவ அமைப்பிலுள்ள ஆபத்தான முரண்பாடுகளை மூடி
வைத்தார்கள். முடிவில் ஆபத்தான முரண்பாடுகள்தான் மேலோங்கி நிற்கின்றன.
முதலாளித்துவம் தனது ஏகபோக நிலையில் மீண்டும் தேக்க நிலையைச் சந்திக்கிறது.
இதன் விளைவாக, எதிர்பாரா வகையில் சமூக ஜனநாயகமானது முதலாளித்துவ அரசியல்
இயக்கமாக வீழ்ச்சியடைந்தது. 1981ல் பிரான்சின் முதல் சோஷலிஸ்ட் அதிபராக
பிராங்காய்ஸ் மிட்டரண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால்
தேசியமயமாக்குவதற்கான அவருடைய சிறந்த சமூக ஜனநாயகக் கோட்பாடுகள்
மூலதனத்தின் எதிர்ப்புக் காரணமாக விரைவிலேயே தகர்ந்துவிட்டன. மிட்டரண்டு
ஆட்சியிலிருக்கும்போதே, ஒரு சில ஆண்டுகளிலேயே, பிரான்சு நாடானது நவீன தாராள
மயத்திற்குத் திரும்பிவிட்டது. இது, இரண்டாவது உலகப்போருக்குப் பிந்திய
சமூக ஜனநாயக அரசியலுக்கு ஏற்பட்டிருக்கும் தடைகளைக் குறிப்பதாகும். மிகப்
பெருமளவில் மக்கள் இயக்கங்களை நடத்தாமல் "அறிவுசார்ந்த" முதலாளித்துவத்தோடு
இசைந்து போகக்கூடிய "சிர்த்திருத்தங்களை" அமல்படுத்துவதையே
இடதுசாரியினரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்த அமைப்பிற்குள் பயனுள்ள
சிர்திருத்தங்களைச் செய்வதற்கான வாய்ப்பு அறவே இல்லை.
சோவியத் யூனியன் குலைந்துபோனது நிலைமையை மிகவும் மோசமாக்கிவிட்டது.
முதலாளித்துவத்தை சர்வதேசமயமாக்குவதற்கு எவ்விதத் தடையுமல்லாமல்
போய்விட்டது. தொழிலாளர்களை நடத்தும் விதம் மற்றும் உலக அளவில்
கீழ்நிலையிலுள்ள நாடுகளை மேலாதிக்கம் செய்வது ஆகியவற்றில் இரக்கமேயில்லாமல்
நடந்துகொள்ளும் பச்சையான முதலாளித்துவத்தை நோக்கி 1990 களில் உலகம் நகரும்
திடீர்த் திருப்பங்களும் நடைபெற்றன. கெடுபிடிப்போரில் முதலாளித்துவம்
அடைந்த வெற்றி காரணமாக "மேலிருந்து" வர்க்கப் போராட்டத்தை ஏகாதிபத்தியம்
முடுக்கிவிட்டுள்ளது.
இத்தகைய நிலையிலான மூலதனத்தின் நியதிக்கேற்ற வகையில், அதன்
வட்டத்திற்குள்ளேயே ஆன இடதுசாரிகளின் அறிவு சார்ந்த அரசியலுக்கு இடமில்லை
என்பது நிதரிசனமான முடிவு. இத்தகைய பாசாங்குகளெல்லாம் போலிக் கருத்துக்கள்
என்பதும் நிரூபிக்கப்பட்டுவிட்டன. தேக்கநிலை திரும்புதலினாலும், நவீன
தாராளமய உலகக்கட்டமைப்பு அதிகரித்தலினாலும், பழமை வாதக் கருத்தோட்டமானது
அனைத்துத் துறைகளிலும் நிதிக் குவியலுக்குள்ள தடைகளை அகற்றி "சுதந்திரச்
சந்தை முதலாளித்துவம்" செயல்படுமாறு செய்கிறது. அதன் விளைவாக சமூக கலாசார
வாழ்விலுள்ள அனைத்தும் சரக்குமயமாக்கப்படுகின்றன. அதனால் குடும்பத்திலும்,
இனத்திலும், சமுதாயத்திலும் ஆழமான முரண்பாடுகள் உண்டாகின்றன. எந்தப்
பொருளாதார அமைப்பும், குறிப்பாக முதலாளித்துவம், கட்டுப்பாடில்லாமல் தனது
நியதிகளை கடைப்பிடிக்கும்படி விடப்பட்டால் அது வாழ முடியாது என்று
ஷூம்வீட்டர் அழுத்தமாகக் கூறினார். முடிவில் அது தன்னைத்தானே அழித்துக்
கொள்ளும். ஏகபோகமாக்கல், ஊக வணிகம், இராணுவத் தன்மை, ஏகாதிபத்தியம்
ஆகியவையெல்லாம் உள்ளடக்கிய "சுதந்திரச் சந்தை முதலாளித்துவம்" என்னும்
கருத்து அபாயகரமான மாயவாதமாகும். வலதுசாரிகளின் அரசியலில் மெய்யான,
அறிவுசார்ந்த தன்மை குறைந்து போய், பகாசுரக் கொள்ளை, வெளிப்படையாக
மீண்டெழும் இனவாதம், போர், ஏகாதிபத்தியம், பாலினப் பிரச்சினை, மத
அடிப்படைவாதம் ஆகியவை அதிகரித்து வருகின்றன. அதன் விளைவாக சர்வதேச அளவில்
காட்டுமிராண்டித்தனத்தை தீவிரப் படுத்துவதன் மூலம் தன்னையே அழித்துக்
கொண்டு தன்னுடன் தொடர்பு கொண்ட அனைத்தையும் அழித்து வருகிறது.
இது முதலாளித்துவம்தான் பிரச்சினை என்னும் தலையாய உண்மையை நமக்கு
உணர்த்துகிறது. இன்றைய காலகட்டத்தில் அதற்குள்ள ஒரே தீர்வு, சோசலிமே,
சோசலிச இயக்கம் எப்பொழுதும் புரட்சிகரமானது. ஜனநாயகமுடையது, சமத்துவமானது,
சுற்றுப்புறத்தை வளமாக்குவது, இவற்றிற்காக மக்களைத் திரட்டிப் பங்கேற்க
வைப்பது. அத்தகைய ஒரு சமுதாயத்தை அமைப்பதில் எற்படும் இடையூறுகள் ஏராளம்.
ஆனால் "ஏராளம்" என்பதும் "முடியாது" என்பதும் ஒரே பொருளுடையன அல்ல.
நன்றி: சமூக விஞ்ஞானம்