mercredi 17 juillet 2013

எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது?




சிந்திக்காதீர்கள்; யாரிடமும் கேட்காதீர்கள்; யார் சொல்வதையும் கேட்காதீர்கள்; பேசாமல் காரணம் கண்டுபிடித்துக்கொண்டே இருங்கள். இதுவே  தோல்வி அடைவதற்கான மிகச்சிறந்த அறிவுரையாகும். இப்படிப்பட்ட அறிவுரைகளைக் கேட்டுத்தான் சிலர் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். சில தன்ன லக்காரர்கள் இதனையே பயன்படுத்தி சிலரைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். ‘‘கடவுளுக்கு உகந்த தூய உயிருள்ள பலியான உங்களைப் படையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு. இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள்.

மாறாக உங்கள் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று மாற்றம் அடைவதாக. அப்போது கடவுளின் திருவுளம் எது என்பதைத்  தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது; எது உகந்தது; எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.’’ (உரோமையர் 12: 1-2) அகந்தை என்பது எதிர்மறையான உணர்வு. எதுவும் கடவுள் எண்ணப்படி நடக்கிறது என்ற உண்மை பூரணமாக நம் மனதில் பரவட்டும். அவர்தான் எதையும் ஆட்டி வைப்பவர். அவர் கையில் நாம் ஒரு பொம்மை. நாம் ஆட்டுவிக்கப்படுபவர். ஒரு செயல் முடிந்தவுடன் அடக்கத்துடனும் வேண்டுதலுடனும் கடவுளிடம் சரணடைந்து விடுவோம்.

நம் ஒருவரால்தான் அத்தகைய காரியங்களைச் செய்ய முடியும் என்று அகந்தை கொள்ளாதிருப்போம்.  அதற்கு நமக்கு பெயரும் புகழும் பிரதிபலனும் கிட்ட வேண்டும் என்று நினைக்காதிருப்போம். கடவுள் நமக்கு உறுதுணையாக இருந்தாலொழிய நாம்  தனியாக எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்து கொள்வோம். அதற்குக் காரணம் எந்த ஒரு சூழலிலும் எதிர்பார்த்தபடி நடக்காமல் போக சாத்தியக் கூறுகள் நிரம்ப உண்டு. பெயர், புகழ், சொத்து, குடும்பம்  போன்ற தன்னிலைப் பிரகடனங்கள் வேண்டாம். இவை எல்லாம் மறைந்து போகக்கூடியவை. என்றோ இவை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும்.

தற்காலிகமாக கடவுள் அருளால் இவை நமக்குக் கொடுக்கப்பட்டன. அகந்தை கடவுளுக்கு அருகாமையில் நம்மைக் கொண்டு செல்வதில்லை. என்றைக்கு அகந்தை நம் மனத்தை விட்டு அகலுகிறதோ அன்றைக்கு நாம் கடவுளுக்கு அருகில் வந்துவிட்டோம் என்று அர்த்தம். அன்றுதான் அவரை நேருக்கு நேர் சந்திக்கின்றோம். தான் என்ற உணர்வை விட்டொழிப்போம். நம் விருப்பத்தை ஒதுக்கிவிட்டு பிறர் விருப்பத்தை நிறைவேற்றப் பழகுவோம். அதிகம் எதிர்பார்ப்பதைவிட கிடைத்துள்ள சிறியதைக் கொண்டு திருப்தி அடைவோம்.

எப்பொழுதும் சிறிய பதவியைத் தேடி சிறியவராகவே இருப்போம். உண்மையான அமைதிக்கும் சிறப்புக்கும் ஊற்றுக்கண் எது என்பதை எண்ணிப்  பார்ப்போம்.
கூச்சலிடுவதையும், வம்பையும் விவாதங்களையும் இயன்ற வரையில் குறைத்துக் கொள்வோம். இவற்றால் நாம் ஆணவ வழியில் சென்று வழுக்கி  விழாதிருப்போம். பேசியே ஆக வேண்டும் என்றால் ஆன்மாவை உயர்த்தும் வார்த்தைகளையே பேசுவோம். நமக்குச் சம்பந்தமில்லாத பிற காரியங்களில் தலையிடுவதையும் பிறர் வார்த்தைகளைப் பற்றி அபிப்பிராயம் சொல்வதையும் நிறுத்திக் கொண்டால் நமக்கு எவ்வளவோ நன்மையும் அமைதியும் கிட்டும். அறிவு எப்போதும் பக்தியின் பின்னரே செல்ல வேண்டும்.

நாம் விரும்பும் வண்ணம் நம்மை ஆக்கிக்கொள்ள முடியவில்லையானால், நாம் விரும்பும் வண்ணம் பிறர் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்  கூடாது.
நல்ல காரியங்களிலேயே ஓயாது ஈடுபட்டு தன்னை மிகவும் சிறியவரென்று எண்ணுவது ஒருவர் பணிவுள்ளவர் என்பதற்கு அறிகுறி. நமது உள்ளம் தூய தாய், மாசற்றதாய் இருந்தால் நமக்கு உலகெங்கும் நல்லதாகவே தெரியும். தேவையற்ற ஆசையை ஒழிப்போம். மனச்சாந்தியைத் தேடிக்கொள்வோம்.  சாவுக்கு அஞ்சி ஓடுவதைவிட பாவத்திற்கு அஞ்சி ஓடுவதுமேல். ஆண்டவரால் வழங்கப்பட்ட நிறைவான செல்வங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

ஆனால், நிச்சயமாக புலப்படாத ஏதோ ஒன்று நம்மை ஆட்சி செய்வது போல் தோன்றுகிறது. கடவுளுக்கு அடுத்தபடியாக காலத்தை உணரக் கற்றுக்கொள்வோம். சில நேரங்களில் அது வரையறுக்கப்பட்டவையைக்கூட  சாய்த்துக் காட்டும். காலத்தைத் தவிர நமக்கு எதுவுமே சொந்தமில்லை. என்றென்றும் காலம் நம்மோடு ஒட்டிக்கொண்டிருப்பதில்லை. காலமும் ஒரு நாள் காலனோடு சேர்ந்து நம்மை இந்தப் பூமியிலிருந்து பிரித்து விடும். ‘‘நம் வாழ்வு குறுகியது; துன்பம் நிறைந்தது. மனிதரின் முடிவுக்கு மாற்று மருந்து எதுவுமில்லை. கீழுலகிலிருந்து யாரும் மீண்டதாகக் கேள்விப்பட்டதில்லை.

தற்செயலாய் நாம் பிறந்தோம். இருந்திராதவர்போல் இனி ஆகிவிடுவோம். நமது உயிர்மூச்சு வெறும் புகையே; அறிவு நம் இதயத் துடிப்பின்  தீப்பொறியே. அது அணையும்போது உடல் சாம்பலாகிவிடும். ஆவியோ காற்றோடு காற்றாய் கலந்துவிடும். காலப்போக்கில் நம் பெயர் மறக்கப்படும்.  நம் செயல்களை நினைவு கூறமாட்டார்கள். நம் வாழ்வு முகில்போலக் கலைந்து போகும். கதிரவனின் ஒளிக்கதிர்களால் துரத்தப்பட்டு அதன் வெப்பத் தால் தாக்குண்ட மூடு பனிபோல
சிதறடிக்கப்படும். நம் வாழ்நாள் நிழல் போலக் கடந்து செல்கிறது.

நம் முடிவுக்குப்பின் நாம் மீண்டு வருவதில்லை. ஏனெனில் முடிவு குறிக்கப்பட்டபின் எவரும் அதிலிருந்து மீள்வதில்லை. எனவே, வாருங்கள்,  இப்போதுள்ள நல்லவற்றைத் துய்ப்போம். இளமை உணர்வோடு இறைவனின் படைப்புப் பொருள்களை முழுவதும் பயன்படுத்துவோம். ரோஜா மலர்களை அவை வாடுமுன் நமக்கு முடியாகச் சூடிக்கொள்வோம். இன்பத்தின்  சுவடுகளை எங்கும் விட்டுச் செல்வோம். இதுவே நம் பங்கு; இதுவே நம் உடைமை’’ (சாலமோனின் ஞானம் 2: 1-9).

-‘மணவைப்பிரியன்’ ஜெயதாஸ் பெர்னாண்டோ

Aucun commentaire:

Enregistrer un commentaire

ANY ERROR SHOULD BE INFORMED BY EMAIL