lundi 24 février 2014

" இன்று நூற்றாண்டு காணும் பாம்பன் ரெயில் பாலம் உருவான வரலாறு " Thanks Mylanchi"

" இந்த நாளில்தான் "

" இன்று நூற்றாண்டு காணும் பாம்பன் ரெயில் பாலம் உருவான வரலாறு "

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே ராமேசுவரம் தீவு வழியாக பல நூற்றாண்டு காலமாக வர்த்தக தொடர்பு இருந்து வந்தது. தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் தேயிலை தோட்ட வேலைக்காக இலங்கைக்கு சென்று வந்தனர்.

தமிழ் நாட்டில் இருந்து சிலவகை பொருட்களை கொண்டு சென்று கொழும்பு நகரில் விற்பனை செய்த தமிழக வணிகர்கள் அங்கிருந்து தேயிலை போன்ற பொருட்களை இங்கு கொண்டு வந்து வியாபாரம் செய்து வந்தனர்.

அவர்கள் மண்டபத்தில் இருந்து படகுகள் மூலம் பாம்பன் வழியாக தனுஷ்கோடி துறைமுகம் சென்று அங்கிருந்து கப்பலில் இலங்கையின் தலைமன்னார் பகுதிக்கு சென்று வந்தனர்.

பயணிகள் வசதிக்காக மண்டபத்துக்கும், தனுஷ்கோடி துறைமுகத்துக்கும் இடையே (பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம் வழியாக) 1876-ம் ஆண்டு பாம்பன் கடல் மீது ரெயில் பாலம் அமைக்கப்பட்டது.

இந்த பாலத்தின் வழியாக 1914-ல் பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கியது. இந்த ரெயில் பாலத்தின் அடியில் கடலில் கப்பல்கள் சென்று வருவதற்கு வசதியாக பின்னாளில் தூக்கு பாலமாக மாற்றி அமைக்கப்பட்டது.

மதுரையில் இருந்து செல்லும் ரெயில்கள் மண்டபத்தில் இருந்து கடல் பாலத்தின் மீது சென்று பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம் வழியாக தனுஷ்கோடி துறைமுகததுக்கு செல்லும்.

தனுஷ்கோடி துறைமுகம் பெரிய துறைமுகமாக விளங்கியது. மதுரையில் இருந்து வரும் ரெயில் தனுஷ்கோடி கடற்பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பலுக்குள் சென்று நேரடியாக பயணிகளை இறக்கிவிடும் வசதியும் அப்போது இருந்தது.

இந்த கடல் ரெயில் பாலத்தின் மொத்த தூரம் 2.45 கிலோ மீட்டர் ஆகும். கடலுக்குள் அமைக்கப்பட்ட 146 தூண்கள் ரெயில் பாலத்தை தாங்கி நிற்கின்றன. இந்த தூண்கள் கட்ட 4 ஆயிரம் டன் சிமெண்ட் பயன்படுத்தப்பட்டது.

ஆங்கிலேய என்ஜினீயர் ஷெஷ்கர் கட்டியதால் இந்த ரெயில் பாலத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. 1964-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடி தீவு அழிந்தது. ரெயில் பாதையும் சேதம் அடைந்தது. ராமேசுவரம் வரை உள்ள ரெயில் பாதை சீரமைக்கும் பணி நடந்தது. 1966-ம் ஆண்டில் மீண்டும் மண்டபம்-ராமேசுவரம் இடையே ரெயில் போக்குவரத்து தொடங்கியது.

இந்த நிலையில் ராமேசுவரம் தீவுக்கு பஸ், கார்கள் சென்று வர வசதியாக மண்டபத்துக்கும், ராமேசுவரத்துக்கும் இடையே மேம்பாலம் அமைக்கப்பட்டது.

அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி அடிக்கல் நாட்டினார். 1986-ம் ஆண்டு முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி வாகனங்கள் செல்லும் மேம்பாலத்தை திறந்து வைத்தார். இதற்கு மறைந்த இந்திராகாந்தி பெயர் வைக்கப்பட்டது. இந்த பாலத்தின் நீளம் 2.23 கி.மீட்டர் ஆகும்.

இந்த பாலத்தின் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து ராமேசுவரத்துக்கு நேரடி வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த மேம்பாலம் இந்தியாவின் 2-வது மிக நீளமான கடல்பாலம் ஆகும். (முதல் பாலம் மும்பை பாந்திரா-வொர்லி இடையே உள்ளது.)

இந்த மேம்பாலத்தையொட்டியே ரெயில் பாலம் உள்ளது. ரெயில் பாலம் பழமையானது என்பதால் கடல் அரிப்பை தடுக்க பாலத்தின் தூண்களில் 6 மாதத்துக்கு ஒருமுறை அலுமினியம் பூசப்பட்டு இந்த பாலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த பாம்பன் ரெயில் பாலத்துக்கு இன்று நூறு வயதாகின்றது. நூற்றாண்டு விழாவையொட்டி மதுரை ரெயில் நிலையத்தில் ரெயில்வே துறை சார்பில் பாம்பன் ரெயில் பாலம் நூற்றாண்டு விழா தொடர்பான கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

பாம்பன் பாலம் மற்றும் தனுஷ்கோடி ரெயில்பாதை உள்பட பல அரிய புகைப்படங்கள் இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. பழந்தமிழரின் வரலாற்றை பதிவு செய்யும் விதமாக கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் பாம்பன் பாலத்தை இன்னும் பல நூறாண்டுகள் வாழ்க என வாழ்த்துவதுடன், அதனை பாதுகாப்பதும் நமது கடமையாகும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire

ANY ERROR SHOULD BE INFORMED BY EMAIL