vendredi 18 avril 2014

குணங்கள் அமைவது அல்ல, நாம் வளர்ப்பது!

குணங்கள் அமைவது அல்ல, நாம் வளர்ப்பது!




வாழ்க்கையைப் பற்றி ஒரு சிறுவனுக்கு விளக்கிக் கொண்டிருந்தார் குரு.  “நம் மனதுக்குள் இரண்டு ஓநாய்கள் இருக்கின்றன தெரியுமா?” என்றார். ‘‘அப்படியா?’’ ‘‘ஆமாம், ஒன்று நல்ல ஓநாய். அன்பு, பாசம், இரக்கம், சந்தோஷம், உற்சாகம் இதுதான் இதற்குத் தெரியும். இன்னொன்று மோசமானது. பொறாமை,  கோபம், ஆத்திரம், ஆவேசம், அகங்காரம், பழிவாங்குதல், வஞ்சகம் இதெல்லாம்தான் அதற்குத் தெரியும். சிறுவனுக்குக் கேட்கக் கேட்க சுவாரஸ்யமாய் இருந்தது.

“இந்த இரண்டு ஓநாய்க்கும் எப்போதும் மனசுக்குள்ள சண்டை நடந்துகிட்டே இருக்கும். கெட்ட ஓநாய், நல்ல ஓநாய்கூட மோதிகிட்டே இருக்கும்.”
“அப்படியா! எது ஜெயிக்கும்?” சிறுவன் ஆர்வமாய்க் கேட்டான். “எந்த ஓநாய்க்கு நீ சின்ன வயதிலிருந்து உணவு கொடுத்து வளர்த்துட்டு வர்றியோ, அது பலசாலியாகி மத்ததை ஜெயிச்சிடும். நீ வளர்க்கிறதுலதான்  இருக்கு. குணங்கள், பிறவியிலேயே அமைவது அல்ல; நாம் வளர்ப்பது.”“இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்து, “மேற்கிலிருந்து மேகம் எழும்புவதை நீங்கள் பார்த்ததும் மழை வரும் என்கிறீர்கள்; அது அப்படியே நடக்கிறது.

தெற்கிலிருந்து காற்று அடிக்கும்பொழுது மிகுந்த வெப்பம் உண்டாகும் என்கிறீர்கள்; அதுவும் நடக்கிறது. வெளி வேடக்காரரே நிலத்தின் தோற்றத் தையும், வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்க அறிந்திருக்கும் போது, இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி? “நேர்மையானது எதுவென நீங்கள் தீர்மானிக்காமல் இருப்பது ஏன்? நீங்கள் உங்கள் எதிரியோடு ஆட்சியாளரிடம் போகும்போது வழியிலேயே உங்கள்  வழக்குகளைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். இல்லையேல் அவர் உங்களை நடுவரிடம் இழுத்துக்கொண்டுபோக, நடுவர் உங்களை நீதிமன்ற அலுவலரிடம் ஒப்புவிப்பார்; நீதிமன்ற அலுவலர் உங்களை சிறையிலடைப்பார்.

கடைசிக் காசுவரை நீங்கள் திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து  வெளியேற மாட்டீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்” (லூக்கா 12: 54-59) இயேசுவைப் பின்பற்றுவது ஒரு பெரும் சவால். இயேசுவைப் பின்பற்றுவோர் இயேசுவைப்போன்று தலை சாய்க்கவும் இடமில்லா சூழ்நிலையில் வாழ த்தயாராகவும் இருக்க வேண்டும். இயேசுவைப் பின்பற்ற முடிவெடுத்தபின், சொந்த பந்தங்களுக்குரிய கவலைகள் சீடனுக்கு இடையூறாக அமையக்  கூடாது. ஏனெனில், சீடனுக்கு இயேசுவே சொந்த பந்தம் அனைத்தும்  ஆகவேண்டும். இயேசுவைப் பின்பற்றும் சீடனின் சொந்த பந்தங்களை  இறைவனே கவனித்துக் கொள்வார்.

இறைவனின் ஞானமும் வல்லமையும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. இறைவனுடன் வழக்காடி எவரும் வெ ல்ல முடியாது. இறைவனின் இரக்கமே மனிதனுக்கு மீட்பு. இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் இயேசுவின் சீடன் இயேசுவின் அன்பில் நிலைத்திருக்கின்றான். இது இறைத்தந்தை இயேசு மீது  கொண்ட அன்பின் பிரதிபலிப்பாகும். இயேசுவின் மகிழ்ச்சி இதுவே. சீடன் அனுபவிக்கும் இன்னல்களையும் வெறுப்பையும் இயேசு ஏற்கெனவே  அனுபவித்து விட்டார். இதுவே சீடனுக்கு ஆறுதல். இயேசுவின் வார்த்தைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் இயேசுவும் இறைத் தந்தையும் சீடரில் குடிகொள்வர்.

இயேசுவின் பெயரால் தந்தை அனுப்பும் தூய ஆவி, சீடருக்கு இயேசுவின் வார்த்தைகளை நினைப்பூட்டுவார். இயேசு அளிக்கும் அமைதி  உலக அமைதி போன்றது அல்ல. நமக்கு எவை பிடித்தமானவையோ அவற்றையே தேடி அலைகின்றோம். அது என்ன விலையானாலும் வாங்கி விடுகின்றோம். நமக்குப் பிடித் தமானதை இழக்கவோ, அல்லது தியாகம் செய்யவோ நம்மால் முடிவதில்லை. இதை உணர்ந்து எதுவுமே நமக்கு வேண்டாம் என்று இருந்துவிட்டால்  என்றுமே துக்கம் என்பது இல்லை. நம் உள்ளத்தைத் தவிர நமக்கு வேறொன்றும் அமைதியை அளிக்காது என்பதை நம்புவோம் தன்னம்பிக்கையும்,  ஆன்மிக வழிபாடு மட்டுமே நமக்கு வெற்றியையும் அளவற்ற அமைதியையும் இன்பத்தையும் தருபவையாகும்.

நான் தினமும் ஆண்டவரை நோக்கி மன்றாடுகிறேன். அழுது புலம்பி என் துயரங்களை எல்லாம் அவரிடம் எடுத்துச் சொல்லி என் குறைகளை நீக்கும்  என்று கதறுகிறேனே, இவை எல்லாம் அவர் செவிகளில் விழவில்லையா? ஏன் இன்னும் என் குறைகளைத் தீர்த்து வைக்கவில்லை? தினமும் திரு ப்பலிக்குச் சென்று, திவ்ய நற்கருணை உண்டு, ஜெபமாலையும் சிலுவைப் பாதையும் செய்து வருகிறேனே, என் துன்பங்கள் விலகியபாடில்லையே  ஏன்? தினமும் இந்தப் பெரும் சோதனைதானா? என்று விரக்தியின் விளிம்பில் விம்மி நின்றாலும், அவரது கருணைக் கண்கள் திறக்கும் நேரம் வந்து விட்டால், சோதனைகள் வேதனைகள் கண்டிப்பாக விலகியே தீரும்.

கிறிஸ்துவைப் பின்பற்றும் நாம், அவரால் அழைக்கப்பட்டவர்கள் என்று கூறிக்கொண்டு நல்லவை நடக்கும்போது மட்டும் அவரைப் போற்றித் துதிப்பவர்  களாகவும், சோதனை காலங்களில் அவரை விட்டு விலகுபவர்களாகவும் வாழ்கிறோம். இப்படி வாழாமல் எங்கள் அன்பின் ஆண்டவரே, எங்களின்  நம்பிக்கையை ஆழப்படுத்திட வரம் தாரும். எந்தச் சூழ்நிலையிலும் உம்மீது உள்ள நம்பிக்கை குறையாமல் இருக்க உதவும். இயேசுவே, உம்மையே  நான் தொடர்ந்து பின்பற்றி உம்மில் ஆழ்ந்த விசுவாசம் கொண்டு வாழ்ந்திட அருள்தாரும் என மன்றாடுவோம். வெளிச்சத்திலேயே நடந்துகொண்டு வெளிச்சமே இல்லை என்று சொன்னால் என்ன பொருள்?

அறிவுக்கு எட்டாத கடவுள், மனித அறிவுக்கு எவ்வளவுதான் எட்டுவார்? கண்ணுக்குப் புலப்படாத கடவுள் யாருக்குப் புலப்படுவார்? கடவுளுடைய கிருபை இல்லாமல் இயேசுவை அறிந்துகொள்ள முடியாது. அன்பு என்ற இதயத்துடிப்பு இல்லாமல் கடவுள்  அறிவு வராது. உலகப்போக்கில் இருந்து, உலக சிந்தனையில் இருந்து விலகி இருந்தால்தான் இயேசுவோடு நெருங்கி இருக்க முடியும்.  அவருக்குச்  சொந்த மானவர்கள் அவரை அறிந்துகொள்வார்கள். இயேசு யார் என்று உணர்ந்துகொள்வார்கள், அவருக்காகவே முற்றும் செயல்படுகிறவர்கள்  ஆவார்கள்.

இது ஒருவருடைய அந்தரங்க சொந்த விருப்பு வெறுப்புகளை உதறித் தள்ளிவிட்டு இயேசுவையே சார்ந்து இருப்பதாகும். ஒருவருடைய  சுயவிருப்பமான தெளிவும், இதயபூர்வமான அன்பும், நாடித்துடிப்பும் அவசியம். இதற்குக் கடவுளுடைய கிருபையும் அவசியம். பூமியில் விழும் ஒருவிதை, பூமியைப் பற்றிப் பிடித்து நீரை உள்வாங்கிக்கொள்கிறது. இதுபோலவே ஒரு மனிதன் கடவுளைப் பற்றிப் பிடித்து அவரு டைய வார்த்தையை உள்வாங்க வேண்டும். நீரை உள்வாங்கிய விதை சுயநலம் இழந்து உடைகிறது. தன்னையே இழக்கிறது. தன்னையே இழந்த  பின்பு முறையாக அரும்புகிறது.

இதுபோலவே தேவ வார்த்தையை உள்வாங்கிய மனிதன் தன்னையே தாழ்த்தி, உடைந்து, சுயநலம்  இழக்கும்பொழுது, அவனுக்குள்ளே கடவுள் விதைத்த வார்த்தை என்றும் விதை வெடித்து முளைக்கிறது. முளைத்த விதை செடியாக வளர்ந்து, பூத்துக் குலுங்கி, காயாக, கனியாகப் பலன் தருவதுபோல் மனிதனின் உள்ளத்தில் விதைத்த கடவுளைப் பற்றிய  அறிவு என்ற விதை, சுயநலம் மறந்த தியாகத்தின் அன்பு என்ற மண்ணில் வளர்ச்சி பெறுகிறது. அது எப்போதும் சுவைமிகு கனி தரும். இதுதான்  கடவுளைப் பற்றிய அறிவு என்பது. அன்பு உறவே இந்தக்கனி. அன்பு உறவுக்கு முடிவு கிடையாது.

இடையூறுகளை எதிர்கொண்டு உறவை வள ர்ப்பதே மனிதத் தன்மை. அதுவே அன்பு! இறைவனோடு கூடிய உறவும் இப்படியே! எல்லையற்ற உறவு அது!
மனிதனின் எல்லா செயல்களுக்கும் எல்லை உண்டு. ஆனால், கடவுள் பற்றிய அறிவிற்கும், அந்த அறிவின் உந்துதலில் ஏற்படும் அன்புக்கும் அதனால் ஏற்படும் உறவுக்கும் எல்லை என்பதே கிடையாது. மனிதனாக நினைத்து விரும்பி அந்த உறவை நிராகரித்தால் ஒழிய கடவுளோடு தொடங்கிய உறவு தொடர்ந்து வளர்ச்சி பெறும். கடலுக்கும் கரைகள் உண்டு! நம் இதய அன்புக்கோ எல்லையே இல்லை.

‘மணவைப்பிரியன்’ ஜெயதாஸ் பெர்னாண்டோ

Aucun commentaire:

Enregistrer un commentaire

ANY ERROR SHOULD BE INFORMED BY EMAIL