உளிச் சத்தம் கேட்கும் இடத்தில் ஏதோ சிலை உருவாகிறது என்பதை உணர்ந்துகொள்ளலாம். பொதுவாகவே அந்தச் சிலை ஏதேனும் கடவுள் வடிவமாக இருக்கலாம் என்றே நாம் ஊகிப்போம். ஆனால், நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கீழாம்பூர் கிராமத்திலிருந்து புறப்படும் உளிச் சத்தம் இயற்கையை ஆராதிக்கிறது. அதற்கு அடுத்த பட்சமாகத்தான் இறையை நிறுத்தியிருக்கிறது. ஆமாம், பாபநாசம் குடில் என்றழைக்கப்படும் அந்த சிலைக்கூடத்தில், வெறும் கல் தூண்களையும், அழகிய மரவேலைப்பாடுகளையும் மட்டுமே காண முடிகிறது. இந்தக் குடிலில் இரண்டு சாதுக்கள் சிற்பக் கலையைக் கற்றுக் கொடுக்கிறார்கள். இவர்கள் கடவுள் என்று எந்த ஒரு உருவத்தினையும் வணங்கவில்லை.
வியப்புடன் அவர்களை நோக்கியபோது அவர்களில் ஒருவரான துறவி குமரன் சொன்ன விளக்கம் வித்தியாசமாகவும், சிந்திக்கத் தகுந்ததாகவும் இருந்தது.
‘‘நாங்கள் சாதுக்கள்; ஆனாலும் எங்களுக்கு மதம் இல்லை. கடவுள் இருக்கிறார். அவர் எப்படி இருக்கிறார் என்று எங்கள் உள்ளுணர்வுக்கு மட்டுமே தெரியும். அவர் எங்களுக்கு ஆணையிடுவார். ஆனால், அவருக்கு உருவம் இல்லை. கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறார். அவருக்கு ஒரு உருவம் என்று வைத்து வணங்கி சிலைக்குள் அவரை அடக்கிவிடக்கூடாது என்று எங்களது குருநாதர் அறிவுறுத்தியிருக்கிறார். குறிப்பாக குருநாதர் தன்னை புகைப்படம் எடுக்க கூடாது; தன் உருவத்தினை வரைபடமாக வரையக்கூடாது என்று எங்களிடம் கேட்டுக்கொண்டார்.
ஏனென்றால், பிற்காலத்தில் அதைக் காட்டி, இதுதான் கடவுள் என்று யாரும் வணங்கி விடக்கூடாதே என்ற கவலைதான். அதேபோல் ஒரிடத்தில் ஒருவர் சாதுவாக வாழ்ந்து, முக்தி அடைந்தார் என்றால், அவரைப் புதைத்த இடத்தில் கல்லறை கட்டி வணங்கி வருகிறோம். இறுதியில் அவர் கடவுள் ஆகி விடுகிறார்.
அதுபோன்று உருவாகி விடக்கூடாது என்று என் குருநாதர், தன் இறுதி காலத்தில், தன்னை அடக்கம் செய்த இடம் யாருக்கும் தெரியகூடாது என்றும் கூறியிருந்தார். நாங்களும் அப்படியே செய்துவிட்டோம். குருநாதர் கட்டளைபடி எங்களையும் யாரும் புகைப்படம் எடுப்பதை நாங்கள் அனுமதிப்பதில்லை. அது அனாவசிய விளம்பரமாகிவிடக்கூடாதே என்ற கவலைதான்.
எங்களுக்கென்று மதம் கிடையாது, வழிபடு இறைவனும் கிடையாது. ஆனால், எங்களுக்கு எங்கிருந்தோ ஓர் ஆணை வரும். அதன்படி நாங்கள் நடந்துகொள்வோம். அதன்படி விளக்கேற்றுவது, ஊதுவத்தி கொளுத்துவதைக் கூட நாங்கள் தவிர்த்துவிட்டோம். ஆசைதான் மனிதனுடைய அமைதியை கெடுக்கும் ஆயுதம். எனவே அதை துறக்கவேண்டும். எனவே தான் நாங்கள் வெள்ளை துண்டை மட்டும் அணிகிறோம். எங்கள் குருநாதரை பாவநாசம் சாமி என்று தான் அழைப்போம். அவரின் இயற்பெயர் சாது மோகன். கேரளத்தில் பிறந்தவர். 1986ம் ஆண்டு அம்பாசமுத்திரம் அருகே உள்ள கீழாம்பூரில் இந்த இடத்தில் வந்து அமர்ந்தார். அவர் இந்த இடத்தினை தேர்வு செய்ய காரணம், முதல் முதலில் மனிதன் தோன்றிய இடம் இந்தப் பொதிகை மலைதான்.
இந்த மலை சாதாரணமானது அல்ல; முதன் முதலில் தோன்றிய மலை. முதல் மனிதன் பிறந்ததே இந்த மலையில்தான். இந்த மலையில் இருந்துதான் பல உலகத்திற்கு மனிதன் சென்றான். தமிழ் மொழி தோன்றியதும் இங்குதான். இந்த மொழி பிற்காலத்தில் 18 ஆயிரம் மொழிகளாக மாறியது. அதனால்தான் மத்திய பிரதேசத்தில் வாழ்ந்திருந்த அகத்திய பெருமானுக்கு, தாய்மொழியாக தமிழே இருந்தது! உலகம் தற்போது மாறி விட்டது. மீண்டும் மனிதன் பழைய நிலைக்கு வரவேண்டும். அப்படி வரவேண்டும் என்றால் மீண்டும் பொதிகை மலையில் இருந்துதான் ஆரம்பிக்கவேண்டும். அங்குள்ள குகையில் வாழ்ந்தால் குளிரடிக்காது. உடுத்திக்கொள்ள சட்டையோ, போர்த்திக்கொள்ள சால்வையோ தேவையில்லை.
மழையில் நனைந்தாலும் நோய் வராது. இது இயற்கை நமக்கு கொடுத்த கொடை. அது மட்டுமல்லாமல் இங்குள்ள இயற்கையை நேசிக்கவேண்டும். எனவே தான் எங்களது ஆசிரமத்தினை எங்கள் ஆசான் பொதிகை மலை அடிவாரத்தில் துவங்கியுள்ளார். இந்த இடத்தில் தற்போது ஒரு அருமையான தோட்டம் உருவாகியுள்ளது. ஒரு காலத்தில் முள்செடிகளாலும், பனை மரங்களாலும் சூழ்ந்திருந்த இந்த இடம், தற்போது தோப்பாக மாறியுள்ளது. இங்கு வசிப்பவர்கள் தினமும் இயற்கையை நேசிக்கிறார்கள். கடவுளாக வணங்கி காப்பாற்றுகிறார்கள்.
பொதிகை மலைக்குச் செல்வதை இவர்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரம் பொதிகை மலை யாத்திரை என்ற பெயரில் இயற்கையை நாசம் செய்வதையும் கண்டிக்கிறார்கள். குறிப்பாக இங்கு வரும் மக்கள் இயற்கைக்கு எதிராக குப்பையைப் போடுவதும், அசிங்கம் செய்வதுமாக இருக்கிறார்கள். இதனால் பொதிகையில் புனிதம் கெட்டுவிடும். எனவே யாத்திரிகர்கள் அங்கு செல்லும்போது சுத்தத்தையும், ஒழுக்கத்தையும் கடைபிடிக்க வேண்டும்.’’
தினமும் இந்த ஆசிரமத்தில் மூன்று முறை தியானம் செய்கிறார்கள். காலையில் எழுந்து குளித்து 7 மணிக்கும், அதன் பின் மதியம் ஒரு முறையும், மீண்டும் மாலை 6 மணிக்கு குளித்து விட்டு ஒருமுறையும் செய்கிறார்கள். ஐம்புலன்களையும் அடக்கி, நிர்மால்யத்தை மட்டும் சிந்திப்பதே இந்த தியானத்தின் நோக்கம்.
‘‘மனிதன் தினமும் காலையில் 4 மணிக்கு ஏழ வேண்டும்.
இரவு 7 மணிக்கு தூங்கச் செல்லவேண்டும். அப்படி சென்றால் அவனுக்கு நோய் வராது. இயற்கையாக வாழ நாம் பழகி கொள்ளவேண்டும். அப்படி பழகி கொண்டால் நாம் நல்ல நிலைக்கு சென்று விடுவோம்” என்று சொல்லும் இவர்களின் இறைப்பணி என்ன தெரியுமா? எந்த ஊருக்கு சென்றாலும், அங்கே அசுத்தமாக இருக்கும் கழிவறைகளை கழுவி சுத்தமாக்குவது! தற்போது இந்த பாபநாசம் குடிசையில் என்ன பணி நடக்கிறது? இங்கே சிற்பிகளை உருவாக்குகிறார்கள். இவர்களுக்கும் ஒரு கட்டளை, எந்த காரணத்தினை கொண்டும் இறைவன் உருவத்தினை இவர்கள் செதுக்க கூடாது! கடைசல் தொழிலில் பல அபூர்வ பொருள்களை தயார் செய்கிறார்கள். இலவசமாக இக்கலையைக் கற்றுத் தந்து பல சிற்பிகளை உருவாக்குகிறார்கள்.
இந்த சிற்பிகள் உருவாக்கும் உருவங்கள், தூண்கள் எல்லாம் இறையம்சம் கொண்டிருக்காவிட்டாலும், நுட்பத் திறன் மூலம் நேர்த்தியான கலை வடிவங்களாக அவை அமைந்திருக்கின்றன. இந்த பாபநாசம் குடிலில், மயில்கள் அச்சமின்றி நடமாடிக்கொண்டிருக்கின்றன. ஒருமுறை சாது மோகன் காலத்தில் ஒரு கரடி குடிலுக்குள் நுழைந்து விட்டது. அதை கொன்று விடலாம் என்று பலரும் யோசனை தெரிவித்தார்கள். ஆனால், அவர் அதுவும் ஒரு பிறவிதான். அது என்னை கொல்ல முயற்சிக்குமானால் அப்போது ஏதேனும் தற்காப்பு முயற்சியை நாமும் மேற்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார். அந்தக் கரடியோ யாருக்கும் எந்தத் தொந்தரவும் கொடுக்காமல், நீண்ட காலம் குடிலிலேயே வாழ்ந்து வந்தது. திடீரென ஒருநாள் காணாமல் போய்விட்டது! எங்கே சென்றது என்பது இன்றுவரை ரகசியம்தான்.
முத்தாலங்குறிச்சி காமராசு
படங்கள்: கந்தன்
Thanks DINAKARAN
Aucun commentaire:
Enregistrer un commentaire
ANY ERROR SHOULD BE INFORMED BY EMAIL