dimanche 26 mai 2013

ஆற்றலும் ஞானமும் தரும் பரிசுத்த ஆவி



‘‘அன்பு செலுத்த முயலுங்கள். தூய ஆவியார் அருளும் கொடைகளையும் குறிப்பாக இறை வாக்குரைக்கும் கொடைகளையும் ஆர்வமாய் நாடுங்கள்’’  (1 கொரிந்தியர் 14: 1). அளவில்லாத வல்லமை உடையவரும் ஆச்சரியத்திற்குரிய அற்புதங்களை இயல்பாய் செய்து வருகிறவரும் எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமானவரும்  எங்கும் நிறைந்திருக்கிறவரும் நித்தியராயிருக்கிறவரும் சகல வரப் பிரசாதங்களுக்கும் ஊற்றாயிருக்கிறவரும் மூவொரு தேவனில் ஒருவராயிருக்கிற மகா  பரிசுத்த ஆவியானவரே, எங்கள் சகாயமே, பிதா சுதனோடு உம்மைப் புகழ்ந்து வணங்குகிறோம்.

திவ்ய பிரகாசத்தின் கதிர்களை வரவிடுபவரே, தரித்திரர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுபவரே, அருட்கொடைகளைக் கொடுக்கிறவரே, இதயங்களில் பிர காசத்தை எழுப்புபவரே, உத்தம ஆறுதல் ஆனவரே, ஆத்துமங்களுக்கு மதுர விருந்தாகிறவரே, பேரின்ப இளைப்பாற்றியைக் கொடுப்பவரே, களைப் பைப் போக்கி சுகம் தருபவரே, வெப்பத்தில் குளிர்ச்சியூட்டுபவரே, அழுகையில் தேற்றுகிறவரே, ஆனந்தத்தோடு கூடிநிற்கும் பிரகாசமானவரே, விசுவா சிகளின் இதயங்களில் மகிமையை நிரப்புபவரே, மனிதரிடம் மண்டிக்கிடக்கும் குற்றங்களைத் தெய்வீகத்தன்மையால் போக்குபவரே,

மனங்களில் நிரம்பும் பாவ அசுத்தங்களை, அழுக்குகளை அகற்றுபவரே, ஈவு இரக்கமற்ற உலர்ந்துபோன இதயங்களில் அருள்மழை பொழிந்து நனைந்து போகச் செய்து நன்மைகளை உதயமாக்குபவரே, தவறிப்  போவோரை சரியான வழியில் நடத்திச் செம்மைப்படுத்துபவரே, விசுவாசிகளுக்கு ஏழு அருட்கொடைகளையும் கொடுத்து புண்ணியத்தின் பேறு பலன்க ளையும் நல்ல மரணத்தையும் நித்திய மோட்ச பேரின்பத்தையும் கொடுக்கும் மூவொரு தேவனில் ஒருவரான தூய ஆவியானவரின் வல்லமையில்  வாழ்வோர் அனைவரும் பேறு பெற்றவரே.

தூய ஆவியானவரை நினைத்து எந்நாளும் வாழ்பவர் நிம்மதியையும் பேரின்பத்தையும் கண்டடைவார்;  நினைத்ததை சாதிப்பார். அவரது முயற்சிகள் வளரும்; முழுமை அடையும். அவரைச் சுற்றியுள்ள வறுமைகள், பிணிகள், மனச்சஞ்சலங்கள், முன்னேற  முடியாத தடைகள் தளரும். தீய சக்திகளின் சதிக் கூட்டணி உடையும். ஞானம், புத்தி, விமரிசை, தைரியம், திடம், பக்தி, தெய்வ பயம் ஆகிய ஏழு கொடைகளை நமக்குத் தந்து, நம்மோடு இருந்து, நம்மை
நல்வழிப்படுத்துபவரான தூய ஆவியானவரைப் போற்றிப் பணிந்து அவரிடம் நம் மன்றாட்டுகளைச் சமர்ப்பிப்போம்.

இவ்வுலகில் நீர் செய்து வந்த, அனுதினமும் செய்து வருகிற சகல நன்மைகளுக்காகவும் உமக்கு நன்றி கூறுகிறோம். மோட்சப் பேரின்பத்தை அளிப்ப வரும் இறைவனுடைய மகத்துவமுள்ள தாயாராகிய புனித கன்னிமரியாளுக்கு அணை கடந்த தயாளத்தை அவருடைய திரு இதயத்தில் சம்பூரணமாய்  நிரப்பியவரும் நீர்தாமே. உமது நேசத்தோடும் இரக்கத்தோடும் எங்களைப் பாதுகாப்பவரும் நீர்தாமே. புனித கன்னிமரியாளுக்கு பூரண கிருபையையும் திருத்தூதர்களுக்கு உறுதியையும் அளித்து அவர்களைத் திடப்படுத்தியவர் நீரே. நீரே அக்கினியாய் இருப்பதால் எங்கள் இதயத்தில் உமது பரிசுத்த நேசத்தின் தீயை மூட்டியருளும். நீரே ஒளிமயமாயிருப்பதால் எங்களை நித்திய ஞானத்தால் ஒளிவிடச்  செய்தருளும்.

நீரே புறா வடிவாயிருப்பதால் எங்கள் தீய குணத் துரும்புகளைத் துடைத்தருளும். நீரே நாவின் வடிவாயிருப்பதால் எப்பொழுதும் உம் மைப் புகழ்ந்துரைக்க எங்கள் நாவைப் பழக்கியருளும். நீரே ஒப்பற்ற மேக வடிவம் கொண்டிருப்பதால் எங்களை உமது நிழலால் மறைத்துப் பாதுகாத்தருளும். விசுவாசிகளின் நடுவிலும் தனிப்பட்ட விசுவாசத்திலும் பரிசுத்த ஆவி இருக்கின்றார். பரிசுத்த ஆவி முதலில் விசுவாசிகளின் அனுபவமானார். அதன்  பின்னரே விசுவாசப் பிரமாணத்தின் ஓர் உண்மையானார். பரிசுத்த ஆவி விசுவாசிகளின் அனுபவ வாயிலாகவும் அறியப்படுகிற ஆளாக உண்மையாக அமைகின்றார். பரிசுத்த ஆவி விசுவாசிக்கு ஜெபிக்கக் கற்றுக் கொடுக்கிறார். விசுவாசிக்காக ஜெபிக்கிறார். அவருடன் அனைத்திலும் ஒத்துழைக்கின்றார். அவருடைய மனச்சான்றை உருவாக்குகின்றார்.

‘‘நாங்கள் நற்செய்தியை வெறும் வார்த்தையில் மட்டும் உங்களுக்குக் கொண்டுவரவில்லை.  பரிசுத்த ஆவிதரும் ஆற்றலோடும் அசையா உள்ளத்து  உறுதியோடும் கொண்டு வந்தோம்’’ என்கிறார், புனித  சின்னப்பர். ஆகவே, எதை அறிய வேண்டுமென்றாலும் பரிசுத்த ஆவிதரும் ஆற்றலும் ஞான மும் அதற்குத் தேவை. கடவுளின் அன்பை நாம் சுவைத்துப் பார்க்க வேண்டுமென்றால் அதற்கும் பரிசுத்த ஆவியானவர் தேவைப்படுகின்றார்.  ‘‘நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியின் வழியாய் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது’’ (உரோமர் 5: 5). ஆவியானவரால்  தூண்டப்படுவோரின்  நாட்டமோ ஆவிக்குரியவற்றின் மீதே இருக்கும். ஆனால், கடவுளின் ஆவி நமக்குள் குடி இருத்தல் வேண்டும்.

‘‘உம் புனித ஊழியராகிய இயேசுவின் பெயரால் நோய்கள் தீரவும், அருங்குறிகள், அற்புதங்கள் நடைபெறவும் உமது கைவன்மையைக் காட்டும் என மன்றாடினர். மன்றாடிய பின் அவர்கள் குழுமியிருந்த இடம் அதிர்ந்தது. அவர்கள்  எல்லாரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பெற்று கடவுளின் வார்த்தைகளைத் துணிவுடன் எடுத்துச் சொன்னார்கள்’’ (திருத்தூதர் பணிகள் 4: 30-31). .திரு த்தூதர்களுக்கு பரிசுத்த ஆவி துணிவும் உறுதியும் அளித்தார். இவை அனுபவத்தைக் காட்டும் பண்புகள். சமநிலையிலிருந்து பிறழாதவர்; சாந்தமானவர்; நன்மையை ஆராய்ந்து ஏற்பவர்; அமைதி படைத்தவர்; இரக்கமும், அன்பும் பெரிதும் உள்ளவர் இத்த கையவர்.

இவர் நல்ல பணிகளில் ஈடுபடுகிறார். அதன்மூலம் தனக்கே நன்மையைத் தேடிக்கொள்கிறார். தீமையைச் செய்வதனால் நாம் நமக்கும் மற்ற வர்களுக்கும் தீமை செய்கிறோம். நன்மையைச் செய்வதனால் நாம் நமக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்துகொள்கிறோம். நாம் ஒரு தீய செய லைச் செய்தால் அதற்குரிய துன்பத்தை நாம் அனுபவித்தே ஆகவேண்டும். இந்த உலகத்திலுள்ள எந்த சக்தியாலும் இதைத் தடுக்கவும் முடியாது;  நிறுத்தவும் முடியாது. அதே போல நாம் ஒரு நல்ல காரியத்தைச் செய்தால் அது தனக்குரிய நல்ல பலனை  விளைவிப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

பிதாவினாலேயும் அதனாலேயும் நிர்மலமாய் வந்து, பிதாவோடேயும் அதனோடேயும் ஒரு தெய்வீகமும் ஆனந்த மகிமையுமாயிருக்கிற தூய ஆவியான வரே, எங்கள் ஆன்மாவின் ஜீவனே. ஆறுதல் இருந்தும் இருக்கிறதும் இருப்பதுமாகிய நித்திய திருத்துவமே, உம்மைப் பணிந்து துதித்து வணங்குகின் றோம்.
‘‘தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம். எனவே, அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயலுவோம். வீண் பெருமையைத் தேடாமலும்  ஒருவருக்கு ஒருவர் எரிச்சல் ஊட்டாமலும் ஒருவர் மீது ஒருவர் பொறாமைப்படாமலும் இருப்போமாக’’ (கலாத்தியர் 5: 25-26).

-‘‘மணவைப்பிரியன்’’ ஜெயதாஸ் பெர்னாண்டோ

Thanks  DINAKARAN

Aucun commentaire:

Enregistrer un commentaire

ANY ERROR SHOULD BE INFORMED BY EMAIL