jeudi 28 mars 2013

உண்மையை ஆண்டவர் நம் இதயத்திலே வைத்துள்ளார்


கருத்துகள்

பிலாத்து, தலைமைக் குருக்களையும் ஆட்சியாளர்களையும் மக்களையும் ஒன்றாக வரவழைத்தான். அவர்களை நோக்கி, “மக்கள் சீரழியக் காரணமாய் இருக்கிறான் என்று இவனை என்னிடம் கொண்டு வந்தீர்கள். இதோ நான் உங்கள் முன்னிலையில் விசாரித்தும் நீங்கள் சுமத்துகிற எந்தக் குற்றத்தையும் இவனிடத்தில் காணவில்லை. ஏரோதும் குற்றம் எதுவும் காணவில்லை. ஆகவே அவர் இவனை நம்மிடம் திருப்பி அனுப்பியுள்ளார். மரண தண்டனைக்குரிய யாதொன்றையும் இவன் செய்யவில்லை என்பது தெளிவு. எனவே இவனை தண்டித்து விடுதலை செய்வேன்’’ என்றான். விழாவின்போது அவர்களுக்கென ஒரு கைதியை விடுவிக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு இருந்தது.

திரண்டிருந்த மக்கள் அனைவரும், “இவன் ஒழிக! பரபாவை எங்களுக்கென விடுதலை செய்யும்’’ என்று கத்தினர். நகரில் நடந்த ஒரு கலகத்தில் ஈடு பட்டுக் கொலை செய்ததற்காக பரபா சிறையிலிடப்பட்டவன். பிலாத்து இயேசுவை விடுதலை செய்ய விரும்பி மீண்டும் அவர்களைக் கூப்பிட்டுப்  பேசினான். ஆனால், அவர்கள், “அவனைச் சிலுவையில் அறையும்... சிலுவையில் அறையும்...’’ என்று கத்தினார்கள். மூன்றாம் முறையாக அவன்  அவர்களை நோக்கி, “இவன் செய்த குற்றம் என்ன? மரண தண்டனைக்குரிய குற்றம் ஒன்றும் இவனிடம் நான் காணவில்லை. எனவே, இவனைத்  தண்டித்து விடுதலை செய்வேன்’’ என்றான்.

அவர்கள் அவரைச் சிலுவையில் அறைய வேண்டுமென்று உரத்தக் குரலில் வற்புறுத்திக் கேட்டார்கள். அவர்கள் குரலே வென்றது. அவர்கள் கேட் டபடியே பிலாத்து தீர்ப்பு அளித்தான். கலகத்தில் ஈடுபட்டு கொலை செய்ததற்காகச் சிறையிலிடப்பட்டவனை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே அவன்  விடுதலை செய்தான்; இயேசுவை அவர்கள் விருப்பப்படியே செய்ய விட்டுவிட்டான். அவர்கள் இயேசுவை இழுத்துச் சென்று கொண்டிருந்தபோது  சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் வயல் வெளியிலிருந்து வந்துகொண்டிருந்தார். அவர்கள் அவரைப் பிடித்து அவர்மேல் இயேசுவின் சிலு வையை வைத்து அவருக்குப்பின்  அதைச் சுமந்துகொண்டு போகச் செய்தார்கள்.

பெருந்திரளான மக்களும், அவருக்காக மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்த பெண்களும் அவர் பின்னே சென்றார்கள். இயேசு அப்பெண்கள் பக்கம் திரும்பி, “எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக அழ வேண்டாம்,  மாறாக உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள். பச்சை மரத்துக்கு இவ்வாறு செய்கிறார்கள் என்றால் பட்டமரத்துக்கு என்னதான்  செய்ய மாட்டார்கள்’’ என்றார் (லூக்கா 23: 12-31). ஆண்டவர் இயேசுவிற்குத் தமது வானகத் தந்தையிடமிருந்த அன்பில் ஆர்வம் இருந்தது. அதனால்தான் அவர் வெளிப்படையாய் மறைத்தூது பணியின் போது பின்வருமாறு கூறினார். “ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில் அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்.

ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை  அனுப்பியுள்ளார்’’ எம்மாவு சென்ற சீடர்கள் இயேசுவை அறிந்து உணரவில்லை. ஆனால், அவர் அப்பத்தை எடுத்து கடவுளைப் போற்றி, பிட்டு  அவர்களுக்குக் கொடுத்தபோது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். அடையாளம் கண்டுகொள்ள  வேண்டிய உண்மையை ஆண்டவர் நம் இதயத்திலே வைத்துள்ளார். அந்த உண்மைதான் இயேசு கிறிஸ்து.

“விண்வெளியே கேள்; மண்ணுலகே செவி கொடு; ஆண்டவர் திருவாய் மலர்ந்தருளுகின்றார். பிள்ளைகளைப் பேணி வளர்த்தேன்; அவர்களோ  எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள். காளை தன் உடைமையாளனை அறிந்து கொள்கின்றது; கழுதை தன் தலைவன் தனக்கு தீனி போடும் இடத் தைத் தெரிந்து கொள்கின்றது. ஆனால், என் மக்களோ என்னைப் புரிந்துகொள்ளவில்லை. விண்வெளியையும் மண்ணுலகையும் சாட்சியாக வைத்து  ஆண்டவர் இறைவாக்கினர் வாயிலாகத் தமது மனவேதனை திரும்பி வருமாறு அழைக்கின்றார். பகுத்தறிவற்ற காளையும், கழுதையும் அறிய வேண் டியதை அறியும்போது பகுத்தறிவு உடையவனான மனிதன் அறிந்துகொள்ளாமல் இருப்பது முறையா?

உன்னை என் மக்களின் வரிசையிலே எவ்விதம் சேர்த்துக் கொள்வேன் என்றும், திரளான மக்களினங்களுக்கிடையே அழகான உரிமைச் சொத்தாகிய  இனிய நாட்டை உனக்கு எவ்விதம் தருவேன் என்றும் எண்ணிக் கொண்டிருந்தேன். என் தந்தை என என்னை அழைப்பாய் என்றும் என்னிடமிருந்து  விலகிச் செல்ல மாட்டாய் என்றும் எண்ணியிருந்தேன். நம்பிக்கைத் துரோகம் செய்த ஒரு பெண் தன் காதலனைக் கைவிடுவதுபோல நீயும் எனக்கு  நம்பிக்கைத் துரோகம் செய்கிறாய்’’ என்கிறார் ஆண்டவர். ஆண்டவர் தமது வேதனையை இறைவாக்கினரான எரேமியா வாயிலாக வெளிப்படுத்துகின்றார். மேலும் அவர் பின்வருமாறு கூறியுள்ளார்:

“நீ  அவர்களுக்குச் சொல்ல வேண்டியது, ஆண்டவர் கூறுவது இதுவே. விழுந்தவன் எழுவதில்லையா? பிரிந்து சென்றவன் திரும்பி வருவதில்லையா? ஏன்  இந்த எருசலேமின் மக்கள் என்றென்றைக்கும் என்னை விட்டு விலகிப் பொய்யைப் பற்றிக் கொண்டு நிற்கின்றார்கள்; ஏன் திரும்பி வர மறுக்கின் றார்கள்? நான் என்ன செய்துவிட்டேன்? என்று குறை கூறுகிறார்களேயன்றி எவருமே தம் தீச்செயலுக்காக வருந்தவில்லை. மனிதனுடைய வார்த்தைகளைக் காட்டிலும் இயேசுவின் வார்த்தைகள் மேலானது. மரியாள் தேவையான ஒன்றான இயேசுவைப் பற்றிக்கொண்டு ஆண்டவரின் பாதம் அமர்ந்திருந்தாள். மார்த்தாளோ பலப்பல காரியங்களைச் செய்வதில் ஆர்வமாய் இருந்தார்.

பல சூழ்நிலைகள் குறித்து கவலை இருக்கலாம். நம்மை விட்டு விலகாத நல்ல துணை இயேசு. தேவையானது இயேசுவின் திருப்பாதம். இறைவனுடைய பாதத்தில் வீழ்ந்து கிடக்க வேண் டும். இயேசுவைப் பற்றிக்கொள்ளும் போதுதான் மனதில் சமாதானம் வருகிறது. தம்மை மிகுதியாகப் பற்றிக் கொள்பவர்களுக்கு இயேசு பாதுகாப்பாய் இருப்பார். சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன், “நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று” என்று அவரைப் பழித்து ரைத்தான். ஆனால், மற்றவன் அவனைக் கடிந்துகொண்டு, “கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய்.

நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே’’என்று பதிலுரைத்தான். பின்பு அவன், “இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்’’ என்றான். அதற்கு இயேசு அவனிடம், “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்’’ என்றார் (லூக்கா 23: 39-43).

'மணவைப்பிரியன்’ ஜெயதாஸ் பெர்னாண்டோ

Thanks DINAKARAN

Aucun commentaire:

Enregistrer un commentaire

ANY ERROR SHOULD BE INFORMED BY EMAIL