‘‘எல்லாம் உம் விருப்பப்படியே நிகழட்டும்!’’
கருத்துகள்
தாம் படப்போகும் அவ மானங்கள், அடி, உதை, காயங்கள், ரத்தம் சிந்துதல், சிலுவையில் அறையப்பட்டு உயிரைக் கையளிப்பது இவைதான் இறைமகனின் வேதனைகள்; ஆழ்துயரத்தின் காரணம். ‘‘தந்தையே உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும்’’ என்று வேண்டிய இயேசு, ‘‘ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப்படியே நிகழட்டும்’’ என்று கூறினார். அப்போது விண்ணகத்திலிருந்து ஒரு தூதர் அவருக்குத் தோன்றி அவரைத் திடப்படுத்தினார்.
இயேசு தாம் மரிப்பதற்கு முன்தின இரவு பட்ட பதினைந்து மறைமுக சித்திரவதைகளைப் பற்றி அவர் கூறியவை: இந்த பூமியில் மிகவும் இழிவானவன் என்று என்னை யூதர்கள் கருதினார்கள். அதனால்,அவர்கள் என் இரு கால்களையும் ஒரு கயிற்றினால் கட்டி, மாடிப் படிக்கட்டுகள் வழியாக என்னைத் தரதரவென்று இழுத்துக்கொண்டு மிகவும் அசுத் தமான குமட்டல் வரக்கூடிய அறைக்குள் சென்றார்கள்.
என் ஆடைகளைக் களைந்து என் உடல் முழுவதிலும் இரும்புச் சாட்டையால் அடித்தார்கள்.
என் உடலை ஒரு கயிற்றினால் கட்டி தரையின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு இழுத்தார்கள்.
ஒரு மரத்துண்டின் மீது ஒரு சுறுக்கு முடிச்சில், அந்த முடிச்சு அவிழ்ந்து நான் கீழே விழும்படி என்னைக் கட்டித் தொங்கவிட்டார்கள். இந்தச் சித்திரவதையைத் தாங்க முடியாமல் நான் ரத்தக் கண்ணீர் வடித்தேன்.
என்னை ஒரு மரக்கம்பத்தில் கட்டி என் உடலைத் துளைத்தார்கள்.
என்னைக் கற்களால் அடித்தும் எரியும் தீப்பந்தங்களால் சுட்டெரிக்கவும் செய்தார்கள்.
என்னைக் குத்தூசிகளால் துளைத்தார்கள். என் தோல், சதை மற்றும் ரத்தக் குழாய்களைக் கூரிய ஈட்டிகளால் குத்திக் கிழித்தார்கள்.
ஒரு கம்பத்தில் என்னைக் கட்டி வெறும் கால்களோடு, நெருப்பாய் தகதகத்த ஒரு உலோகத் தகட்டின் மேல் நிற்கச் செய்தார்கள்.
ஓர் இரும்பு மகுடத்தை என் தலைக்குச் சூட்டி, மிக மிக அசுத்தமான ஒரு துணியால் என் கண்களைக் கட்டினார்கள்.
கூர்மையான ஆணிகள் நிறைந்த ஒரு நாற்காலியின் மீது என்னை உட்காரச் செய்து என் உடல் முழுவதும் ஆறாத காயங்களை ஏற்படுத்தினார்கள்.
என் காயங்களில் ஈயத்தையும் பிசினையும் ஊற்றினார்கள். அதன் பிறகு ஆணிகள் நிறைந்த நாற்காலியில் என்னை அழுத்தினார்கள். அப்போது அந்த ஆணிகள் என் சதையைத் துளைத்துக் கொண்டு இன்னும் ஆழமாக உள்ளே சென்றன.
எனக்கு மிகுந்த அவமானமும் வேதனையும் உண்டாகும்படி என்னுடைய பிடுங்கி எறியப்பட்ட தாடி மயிர்க்கால்களின் துவாரங்களில் ஊசிகளால் குத்தினார்கள். பின்பு என் இரு கைகளையும் என் முதுகின் பின்புறம் கட்டி சிறையின் வெளியே என்னை அடித்தும் உதைத்தும் இழுத்துச் சென்றார்கள்.
என்னை ஒரு சிலுவையின் மீது தூக்கியெறிந்து நான் மூச்சுவிட திணறும்படி என்னை இறுக்கிச் சிலுவையுடன் சேர்த்துக் கட்டினார்கள்.
நான் சிலுவையில் பூமியின் மீது படுத்திருக்கும்போது என் மீது ஏறி மிதித்துச் சென்று என் மார்பைக் காயப்படுத்தினார்கள். பிறகு என் முள் முடியிலிருந்து ஒரு முள்ளை எடுத்து என் நாக்கின் உள்ளே குத்தினார்கள்.
மிகவும் அசுத்தமான கழிவுப் பொருட்களை என் வாயில் ஊற்றி, என்னை மிக மிக அருவறுப்பான மொழிகளால் தூற்றினார்கள். ‘‘எனக்கு ஆறுதல் அளிக்க யாராவது ஒருவரைத் தேடினேன்; ஆனால் யாரும் கிடைக்கவில்லை.’’ பின்பு இயேசு கூறியதாவது: ‘‘ஒவ்வொருவரும் இந்த பதினைந்து வகை சித்திரவதைகளை அறிந்துகொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம். அவை ஒவ்வொன்றும் போற்றப்பட வேண்டும். யார் ஒருவர் இந்தப் பாடுகளில் ஒன்றையேனும் மிகுந்த அன்போடு எனக்குக் காணிக்கையாக்கி, பக்தி விசுவாசத்தோடு நாள்தோறும் என்னை நினைக்கிறார்களோ அவர்களுக்குத் தீர்ப்பு நாளன்று முடிவில்லாத மகிமையை சன்மானமாக அளிப்பேன்’’ என்கிறார், இயேசு.
‘‘அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். அடுத்த நாள் ஓய்வு நாளாகவும் பெருநாளாகவும் இருந்தது. எனவே அன்று சிலுவையில் உடல்கள் தொங்கலாகாது என்பதற்காகக் கால்களை முறித்துச் சடலங்களை எடுத்து விடுமாறு யூதர்கள் பிலாத்திடம் கேட்டுக் கொண்டார்கள். ஆகவே படை வீரர் வந்து இயேசுவோடு சிலுவையில் அறைப்பட்டிருந்தவருள் ஒருவனுடைய கால்களை முதலில் முறித்தார்கள். பின்னர் மற்றவருடைய கால்களையும் முறித்தார்கள். பின்பு அவர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர் ஏற்கனவே இறந்து போயிருந்ததைக் கண்டு அவருடைய கால்களை முறிக்கவில்லை.
ஆனால், படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே ரத்தமும் தண்ணீரும் வடிந்தன. இதை நேரில் கண்டவரே இதற்குச் சாட்சி. அவரது சான்று உண்மையானதே. அவர் உண்மையையே கூறுகிறார் என் பது அவருக்குத் தெரியும். நீங்களும் நம்ப வேண்டும் என்பதற்காகவே அவர் இதைக் கூறுகிறார். ‘எந்த எலும்பும் முறிவு படாது’ என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது. மேலும், ‘தாங்கள் ஊடுருவக் குத்தியவரை உற்று நோக்குவார் கள்’ என்னும் மறை நூல் கூறுகிறது. அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் இயேசுவின் சீடர்களுள் ஒருவர்.
யூதருக்கு அஞ்சியதால் தம்மைச் சீடர் என்று வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாதவர். அவர் இயேசுவின் உடலை எடுத்துக் கொண்டு போக பிலாத்திடம் அனுமதி கேட்டார். பிலாத்தும் அனுமதி கொடுத்தான். யோசேப்பு வந்து இயேசுவின் சடலத்தை எடுத்துக்கொண்டு போனார். முன்பு ஒருமுறை இரவில் இயேசுவிடம் வந்த நிக்கதேம் என்பவரும் அங்கு வந்து சேர்ந்தார்.
அவர் வெள்ளைப் போளமும் சந்தனத் தூளும் கலந்து ஏறக்குறைய முப்பது கிலோ கிராம் கொண்டு வந்தார். அவர்கள் இயேசுவின் உடலை எடுத்து யூத அடக்க முறைப்படி நறுமணப் பொருள்களுடன் துணிகளால் சுற்றிக் கட்டினார்கள். அவர் சிலுவையில் அறையப்பட்டிருந்த இடத்தில் ஒரு தோட்டம் இருந்தது. அதில் அதுவரை யாரும் அடக்கம் செய்யப்படவில்லை. அன்று பாஸ்கா விழாவுக்கு ஆயத்த நாளாய் இருந்ததாலும் அக்கல்லறை அருகில் இருந்ததாலும் அவர்கள் இயேசுவை அதில் அடக்கம் செய்தார்கள்’’ (யோவான் 19: 39-41).
கிறிஸ்துவின் ஆன்மாவே எம்மைப்
புனிதப்படுத்தும்
கிறிஸ்துவின் திருஉடலே எம்மை மீட்டருளும்
கிறிஸ்துவின் திரு ரத்தமே எம்மை
நிறைவித்தருளும்
கிறிஸ்துவின் விலாவினின்று வழிந்த
திரு நீரே எம்மைக் கழுவியருளும்
கிறிஸ்துவின் திருப்பாடுகளே எம்மைத் திடப்படுத்தியருளும்
உமது திருக்காயங்களுக்குள்ளே எம்மை
மறைத்தருளும்
உம்மை விட்டு எம்மைப் பிரிய விடாதேயும்!
-‘மணவைப்பிரியன்’ ஜெயதாஸ் பெர்னாண்டோ
Thanks DINAKARAN
Aucun commentaire:
Enregistrer un commentaire
ANY ERROR SHOULD BE INFORMED BY EMAIL