lundi 4 mars 2013

உலகியல் சொத்து அனைத்துமே இறைவனூக்குரியது

உலகியல் சொத்து அனைத்துமே இறைவனூக்குரியது

கருத்துகள்

தவக்காலம்: 13.2.2013 முதல் 31.3.2013 வரை

அன்று ஆண்டவர் இயேசு நற்செய்தியைப் பறை சாற்றியபோது அவரிடம் வந்தவர்கள் நோயுற்றவர்களாகவும், பலவீனமானவர்களாகவும் இருந்தனர்.  அவர்கள் இயேசுவின் காலடியில் அமர்ந்து இறை வார்த்தையைக் கேட்டு இறை அன்பால் நிரம்பப் பெற்று மன அமைதியும், உடல்நலமும் பெற்றனர்.  அவர்கள் தூய ஆவியால் நிரப்பப் பெற்று, புதுப்படைப்பாயினர். இயேசுவின் வார்த்தையைக் கேட்ட அனைவருக்கும் இந்த இறை அனுபவம் ஏற்பட்டது.  பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருந்தவர்களுக்கு   இளைப்பாறுதல் தந்த நற்செய்தியைத்தான் ஆண்டவர் அறிவித்தார்.

ஆண்டவர் இயேசு குறைகளைப் பொருட்படுத்துவதில்லை. அவர் குறையை  நிறைவாக மாற்றுகின்றார். எனவே நாம் உலக சுகங்களைக் கைவிட்டு  இந்த தவக்காலத்தில் இயேசுவோடு சேர்ந்து நடந்து செல்வோம். பாவத்தைக் கைவிட்டு தூய்மை பெறுவோம். விண்ணகம் மகிழ்வதற்கான ஒரே  காரணம் பாவி மனம் மாறுவதுதான் என்று கற்பித்தவர், நம் ஆண்டவர். உண்மையான கடவுளான இயேசுவை விசுவாசிப்போம். அவர் கூறிய  மறைவார்த்தைகளின் நோக்கம் பாவியின் ஆன்மா தூய்மை பெற வேண்டும் என்பதற்காகத்தான். இறை மகன் இயேசு கிறிஸ்துவை உரிமைச் சொத் தாக்குவதாக இருக்கட்டும், நமது தவக்காலப் பயணம்.

அன்பால் அதிர்வுகளை ஏற்படுத்தி ஆச்சரியங்களை உண்டாக்கியவர் இயேசு. காலமும் இடமும் கடந்து எல்லையற்றுச் செல்கின்றன அவரது அன்பின்  அதிர்வுகள். இயேசுவின் அன்பின் அதிர்வுகள் வலுப்பெற்று இன்றும் மனுக்குலத்தைப் பிரமிக்க வைக்கின்றன. இயேசுவின் வாழ்வும் போதனையும்  இம்மண்ணிருக்கு மட்டும் மாந்தர் அனைவருக்கும் ஒளியும் வழியுமாக இருக்கும். ஏனெனில், இயேசுவே மனிதரின் வாழ்வும் மகிழ்வுமாகத் திகழ்கின் றார். இயேசுவை இழந்தவர் எதைப் பெற்றிருப்பினும் இகழ்ச்சிக்குரியவரே; அவர் ஒன்றுக்கும் உதவாதவரே.

இயேசு ஆயிரமாயிரம் விடியல்களுக்கு வித்திட்டவர். மனிதர்களை நேசிக்கச் சொன்ன மகான். அன்பை மனங்களில் தூவியவர். அன்புக்கு  இலக்கணமாய்த் திகழ்ந்தவர். அவர் இந்த உலகை, நமது உறவுகளை, உணர்வுகளை, ஏக்கங்களை, மனக்காயங்களை அறிந்தவர். அவர் வாழ்வின்  நுணுக்கங்களை, சமுதாய ஏற்றத்தாழ்வுகளை, ஏழைகளின் பரிதாப நிலைகளை உணர்ந்தவர். மக்களோடு மக்களாய் இணைந்து பழகியவர். அவர்கள்  துன்பத்தில் பங்கு கொண்டு துயரங்களைப் போக்கியவர். எனவே, அவரது போதனைகள் புரட்சியை ஏற்படுத்தின.

ஏழைகளை நேசித்த இயேசு அவர்களை ‘பேறு பெற்றோர்’ என்றார். வறுமையும், ஏழ்மையும் கடவுளின் தண்டனையாகவும், சாபமாகவும் கருதப்பட்ட  அந்நாட்களில், இயேசுவின் புதிய சிந்தனை அவர்களது வறண்ட இதயத்தில் வற்றாத நீரூற்றாகப் பொங்கிப் பெருக்கெடுத்தது. “உயர்ந்தவர் தாழ்த் தப்படுவார். தாழ்ந்தவர் உயர்த்தப்படுவார்’’ என்று கூறி நியதிகளையும், நியமனங்களையும் மாற்றினார். ‘யார் பெரியவன்’ என்று கேட்கும்  கேள்விகளுக்கு செல்வம், பதவி, ஆள்பலம், அதிகாரம் படைத்தோரையே எல்லோரும் சுட்டிக் காட்டுவர்.

ஆனால், அதை மாற்றி அமைத்து, நீங்கள் குழந்தைகள் ஆகாவிடில், உங்களையே தாழ்த்தாவிடில், உங்கள் பிடிவாதங்களைத் தளர்த்தாவிடில், உங்கள் தன்னலத்தைத் தகர்த்தெரியாவிடில்,  உடன் இருப்போருடன் ஒத்துப்போகாவிடில், நீங்கள் பெரியவராய், பெருந்தன்மையாளராய் இருக்க இயலாது. தொண்டு செய்பவரே, பலனை  எதிர்பார்க்காது பணி செய்பவரே பெரியவர் என்னும் புது இலக்கணம் தந்து, தமது வாழ்வையும் தொண்டாக மாற்றி உலகக் கோட்பாடுகளுக்கும்,  நடைமுறைகளுக்கும் சவுக்கடி தந்தவர். அவரது போதனையைக் கேட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். அவர் கற்பிப்பதைக் கேட்ட பலர் “இவருக்கு  இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்ட ஞானம்’’ என்று வியந்தனர்.

தமது போதனைகளில் பழிவாங்கும் தன்மையைப் பழிக்கிறார். தான் என்ற ஆணவம் வளராமல் அடக்குகிறார். அன்பையும் சமாதானத்தையும்  விதைக்கிறார். தீமையை அறுவடை செய்து மனக்களஞ்சியங்களில் சேர்த்து வைத்து தீயவராய்த் திரியாதீர் என்று திருத்துகிறார். எல்லாரிடமும் அன்பு  செய்யப் பணிக்கின்றார். பணிவையும், பாசத்தையும் பரிணமிக்கச் செய்யுங்கள் என்கிறார். அயலானை நேசித்து அன்பினால் அனைத்துத் தடைக¬ ளயும் தகர்த்தெறியுங்கள் என்கிறார்.
அளவற்ற இரக்கம் மற்றும் நன்மையின் உறைவிடமான இறைவன் மனிதரிடம் இடைவிடாது பரிவு காண்பிக்கின்றார். இறைவனைப் போல் மனிதர்  பிறருக்குச் செய்யும் நன்மைதான் தானதர்மங்கள். தானதர்மம் செய்வது சகோதர அன்பையும் இறை அன்பையும் குறிக்கின்றது.

“தம் கண் முன்னேயுள்ள சகோதர, சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது.’’ (1 யோவான் 4: 20).  தானதர்மம் செய்வது நம்பிக்கையைச் செயலில் காண்பிப்பதாகும்.  பிறருக்கு இரக்கம் காண்பிக்கும்போது நாமும் இறை இரக்கத்திற்கு உரியவர்  ஆகிறோம். உன்மீது அன்பு கொள்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கொள்வாயாக என்ற இறைக்கட்டளையை நிறைவேறச் செய்வ துதான் தானதர்மம் செய்வது. இது இறை ஆசீருக்கு நன்றி செலுத்துவதும், ஆன்மிக வாழ்வுக்கான சேமிப்பும் ஆகும்.

நன்மையின் நிறைவில் வளர்ந்திட வேண்டுமென்றும் கடவுள் கட்டளையிட்டுள்ளார். இதற்கான சிறந்த வழிதான் தானதர்மங்கள். ஆண்டவர் இயேசு  ஆன்மிக வளர்ச்சிக்குத் தேவையாக மூன்று காரியங்களைக் கூறுகின்றார். அவை முறையே தர்மம் செய்தல், இறை வேண்டல் மற்றும் நோன்பு இருத் தல் ஆகும். தானதர்மம் செய்வது நிலை வாழ்வைப் பெற்றுக்கொள்ளக் காரணமாகின்றது. தானதர்மம் செய்வது ஓர் அறச்செயல் மட்டுமல்ல. அது  இயேசுவை வறியோரிடம் கண்டு செய்யும் இறை ஊழியமுமாகும்.

தீமை செய்து அநியாயமாகப் பணம் ஈட்டுபவர்கள் தீமையின் கூலியான பணத்தை நன்மை செய்யப் பயன்படுத்துவதால் எப்பயனும் இல்லை.  நியாயமாக  ஈட்டிய செல்வத்தால் தானதர்மம் செய்தால்தான் பலனுண்டு. பலவிதமான அநியாய வழிகளில் பணம் சம்பாதித்து அதன் ஒரு பங்கைத்  தானம் செய்பவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். யூதாஸ் முப்பது வெள்ளிக்காசுக்காக இயேசுவைக் காட்டிக் கொடுத்தான். ஆனால், அப்பணத்தால்  அவனுக்கு எப்பயனும்  விளையவில்லை. அது அவனுடைய அழிவுக்குத்தான் காரணமாயிற்று.

“ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாராகில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?’’ (மாற்கு
8:36).  இந்த வார்த்தைகள் நமது காதுகளில் அவ்வப்போது  ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும். நிலையற்ற உலகம் இது என அறிந்தும்கூட  மனிதனின் ஆசைக்கு அளவில்லை. பணம், பதவி, பட்டம், புகழ், பெயர் இவற்றைப் பெறுவதற்காக எந்த அளவுக்கும் தரம் தாழ்ந்து செல்லத்  தயாராக உள்ளான். அதனை அடைய எதைச் செய்யவும் துணிந்து நிற்கிறான். பணமும், பதவியும் சேர்ந்துவிட்டால் மனிதனின் கண் பார்வை  மறைக்கப்படுகிறது. அகங்காரம், ஆணவம் எனும் அலகை தலைதூக்கி ஆடுகிறான்.

அலகையின் பிடியில் சிக்குண்ட இந்த மனிதனிடம் இயேசு கூறுகிறார்: “அறிவிலியே, சாவு உனக்கு நிச்சயம். சாவிற்குப் பின் விண்ணகத் தந்தை  உன்னை கணக்குக் கேட்கும்போது, நீ உனது அதிகார பலத்தால் குறுக்கு வழியில் சேர்த்து வைத்த சொத்துகளின் பட்டியலையா காண்பிக்கப்  போகிறாய்? எனவே, அறிவற்ற மனிதர் செய்வதுபோல் நிலத்தின் விளைச்சலை மிகுதியாக்கி அதனைச் சேகரித்து வைக்கத் திட்டமிடுவதைத் தவிர்த்து, நம்மிடம் செல்வம் இருந்தால் அதனை இல்லாதவரோடு பகிர்ந்துகொள்ளப் பழகிட வேண்டும்.

அப்படிச்செய்தால் நமது உயிர் உடலை விட்டுப் பிரிந்தாலும் நம்மால் வாழ்வு நடத்தும் மற்றவரிடம் நாம் தொடர்ந்து வாழ முடியும். அதோடு உலகின் செல்வம் அனைத்துமே இறைவன் சொத்து. அதை  நமதாக்கிச் சொந்தம் கொண்டாடுவது அழகல்ல. அது உலகிலுள்ள அனைவருக்காகவும் படைக்கப்பட்டது. அதை நாம் சேர்த்து வைத்துக்கொண்டால்  அது நமது விண்ணகப் பயணத்தைத் தடை செய்துவிடும். இறைக்காத கிணறு வறண்டு போவதுபோல, பகிர்ந்துகொள்ளாத மனமும் பாலைவனமாகி  விடும்.’’

-‘மணவைப்பிரியன்’ ஜெயதாஸ் பெர்னாண்டோ

1 commentaire:

  1. Now I am able to get the full text.The text is wonderfully written.Congratulations.It can still be used during the last days of Lent. Thank you Blaise.All that you are sending me are ubique and very useful. I pass on to my friends also.

    RépondreSupprimer

ANY ERROR SHOULD BE INFORMED BY EMAIL