என் சமையலறையில்!
மேரி பிஸ்கெட்டை மிக்ஸியில் பொடித்து, அதனுடன் மில்க்மெய்ட் கலக்கவும். அதில் ஏலக்காய்த் தூள், சீவிய பாதாம், முந்திரி கலந்து உருட்டியோ, தட்டையாகவோ செய்து, ஃபிரிட்ஜில் உள்ள ஐஸ் ட்ரேயில் வைக்கவும். சிறிது நேரம் கழித்து எடுத்தால் ‘பிஸ்கெட் ஸ்வீட்’ ரெடி!
விரத நாட்களில் வெங்காயம் பயன்படுத்தாத நேரங்களில், தயிர் பச்சடியில் போட காய்கறி இல்லையா? சிறிது தேங்காய், பச்சை மிளகாயை அரைத்துச் சேர்த்தால் புதுச்சுவை கிடைக்கும். நீர் மோரில் சிறிது தக்காளிச்சாறு சேர்க்கவும். கூடவே சிறிது கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், இரண்டு சிட்டிகை பெருங்காயத்தூள் கலக்கவும். வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த நீர் மோர்!
மீந்த வெற்றிலைகளைத் தூக்கி எறிய வேண்டியதில்லை. அவற்றைக் கழுவி, சிறிது மிளகு, சீரகம் சேர்த்து அரைக்கவும். அதோடு சிறிது பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்தால் ஜலதோஷம் பிடிக்காமல் இருக்கும். பழுத்து, தோல் சுருங்கிய தக்காளியை உப்பு கலந்த குளிர் நீரில் ஒரு இரவு முழுவதும் போட்டு வையுங்கள். காலையில் புதியது போல ஆகிவிடும்.
வாழைப்பூ, வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கிய பிறகு மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். இதனால் அவற்றின் நிறம் மாறாமல் இருக்கும்... கறை பிடிக்காது... துவர்ப்பு நீங்கும். பாப்கார்ன் நமத்துப் போய்விட்டதா? கவலையை விடுங்கள். தேங்காய் சட்னியில் பொட்டுக்கடலைக்கு பதிலாக இதை சேர்த்து அரைக்கலாம். சட்னி புது ருசியாக இருக்கும்!
தயிரின் மேல் படிந்திருக்கும் ஆடையை எடுத்து, சிறிது தேன், வெல்லம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும். சட்னி அரைக்கும் போது, பச்சை மிளகாய், மிளகாய் வற்றலை குறுக்காக நறுக்காமல், நீளவாக்கில் கீறிப் போட்டால் சீக்கிரம் மிக்ஸியில் அரைபடும். வெண்ணெய் மீது ஒரு டீஸ்பூன் சர்க்கரையைத் தூவி வைத்தால் உலராமல் இருக்கும். எள்ளைப் பொடிக்கும் போது, சிறிது உப்பு சேர்த்தால் கசக்காது.
கேரட்டின் தோல் சீவி, நுனி மற்றும் அடிப்பகுதியை வெட்டி, ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு, இறுக்கமாக மூடி, ஃபிரிட்ஜில் வைத்துவிட்டால் பல நாட்களுக்குக் கெடாமல் இருக்கும். ஒரு பானையில் மணலைப் போட்டு அதில் எலுமிச்சைப்பழங்களைப் புதைத்து வைத்துவிட்டால் பழங்கள் கெடாமல் இருக்கும். ரோஜா இதழ்களை இஞ்சி, புளி, மிளகாய் சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் புதிய சுவை கிடைக்கும்.
Aucun commentaire:
Enregistrer un commentaire
ANY ERROR SHOULD BE INFORMED BY EMAIL