lundi 20 janvier 2014

கடல் நீரின் மீது ஒரு காடு!

கடல் நீரின் மீது ஒரு காடு!


1960 ஆம் ஆண்டு, ‘திராவிட நாடு’ (3.7.1960) ஏட்டில், பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய சில வரிகள் இவை:
‘தம்பி, கடல் நீரின் மீது ஒரு காடு.
அடர்ந்து இருந்தது முன்பு என்பது, இப்போது அழிபட்டுக் கிடக்கும் நிலையிலும் தெரிகிறது. வேறெங்கும் அதிகம் காணப்படாததும், உப்பங்கழிகளில் மட்டுமே வளரக்கூடியதுமான, பலவகை மரங்கள்,கொடிகள், செடிகள் நிரம்பி உள்ளன.
ஆலுக்குள்ள விழுதுகள் போல, அந்தச் செடிகளில் இருந்து கிளம்பிய கொடிகள், தண்ணீரைத் தொடுகின்றன; உள்ளேயும் செல்கின்றன. இடையிடையே திட்டுகள் உள்ளன. அவை மேய்ச்சல் இடங்களாகப் பயன்படுகின்றன.
சில இடங்களில் விரிந்து பரந்து உள்ளன. சில இடங்களிலோ, தோணி நுழைகின்ற அளவு மட்டுமே நீர்ப்பரப்பு உள்ளது. அங்கே, விழுதுகளும், கொடிகளும் வழிமறித்து நிற்கின்றன. வளைத்தும், பிரித்தும், நீக்கியும் வழி காண வேண்டி இருக்கிறது.
செம்போத்தும், குருகும், வக்காவும், வண்ணப்பறவைகளும், ஆங்காங்கு தங்கி உள்ளன. இசை எழுப்பும் பறவைகளும் உள்ளன. ஆள் அரவம் கேட்டு மரத்தில் இருந்து கிளம்பிச் சிறகடித்துக் கொண்டு, வேறிடம் நாடிப் புள்ளினம் பறந்திடும் காட்சி, உள்ளபடியே அழகாக இருக்கின்றது.
வெளிர் நீலவண்ண நீர், சூழப் பச்சை, மேலே நீலமும், வெண்மையும் கொண்ட மேகக்கூட்டம், இடையில் வெண்ணிறக் கொக்குகள், விமானப்படை அணிவகுத்துச் செல்வதைப் போல!
என்று எழுதி இருக்கின்றார்.
எங்கே இருக்கிறது இந்தக் காடுகள்? தமிழகத்திலா? ஆம். சிதம்பரத்தில் இருந்து 12 கல் தொலைவில் உள்ள பிச்சாவரம் அலை ஆத்திக் காடுகளைப் பற்றித்தான் இப்படி வருணிக்கிறார் அண்ணா. இதை, பிச்சாவரம் படகுக் குழாமில், எழுதி வைத்து இருக்கின்றனர்.
பிச்சாவரம் படகுக் குழாம்
உலகின் மிகப்பெரிய அலை ஆத்திக் காடுகள், பிரேசில் நாட்டில் உள்ளன. அதன் பரப்பளவு 26 ஆயிரம் சதுர கிலோ மீட்டர்கள். அதற்கு அடுத்தபடியாக, உலகிலேயே இரண்டாவது இடத்தைப் பெறுவது நமது பிச்சாவரம் காடுகள்தாம். இந்தக் காடுகளில் உள்ள செடிகளும், குறுமரங்களும், கடல்நீருக்கு உள்ளேயே வளருகின்றன. இவற்றின் தண்டுகளிலும், கிளைகளிலும் உள்ள துளைகளின் வழியாக, உயிர்க்காற்றை உறிஞ்சுகின்றன. நீர்மட்டம் உயரும்போது, சிறிய குழல்களைவெளியே நீட்டி, காற்றை உறிஞ்சுகின்றன. கடல்நீரில் உள்ள உப்புத்தன்மையை வடிகட்டியே நீரை எடுத்துக் கொள்கின்றன. இவற்றின் இலைகளின் வழியாக ஆவியாதல் மிக மெதுவாகவே நடக்கும்.
அறியப்படாத பிச்சாவரம்
பிச்சாவரம் காடுகளைப் பற்றி பற்றி அண்ணா எழுதி ஆண்டுகள் ஐம்பது கடந்து விட்டன. ஆனால், இன்னமும் ஊட்டி, கொடைக்கானலை அறிந்த அளவுக்கு, பிச்சாவரம் தமிழர்களால் முழுமையாக அறியப்படவில்லை என்பதே வேதனைக்குரியது.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பே ஒருமுறை நான் பிச்சாவரத்துக்கு வந்தேன். அப்போது கரையில் ஒருசில படகுகள் மட்டுமே மிதந்து கொண்டு இருந்தன. ஒரு படகோட்டியை அணுகினேன். இப்போது மணி மூன்று ஆகிவிட்டது. உள்ளே சென்று வர இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகி விடும். இதற்குமேல் புறப்பட்டுச் சென்றால் இருட்டி விடும். விளக்குகள் கிடையாது. திரும்பி வரும்போது சிரமமாகி விடும். எனவே, நாளை காலையில் வாருங்கள்’ என்று சொல்லி விட்டார்கள். ஏமாற்றத்தோடு திரும்பினேன்.
அதற்குப்பிறகு, எத்தனையோ முறை, சிதம்பரம் வழியாகச் சென்றபோதிலும், பிச்சாவரத்துக்குப் போகும் வாய்ப்பு அமையவில்லை; அல்லது நான் அமைத்துக் கொள்ளவில்லை. எனவே, எப்படியாகிலும் பிச்சாவரம் அலையாத்திக் காடுகளைப் பார்த்து விடுவது என்று உறுதி பூண்டு இருந்தேன்.
என் மூத்த சகோதரியின் மகன் ஹரிகுமார் திருமண உறுதி நிகழ்ச்சிக்காக, நெய்வேலி செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது. அத்துடன், பிச்சாவரத்தையும் பார்த்து வருவது என்று தீர்மானித்தேன். மனைவி, மகளுடன், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டேன். இரவு 10.30 மணிக்குப் புறப்பட்ட பேருந்து, அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் சிதம்பரம் கொண்டு போய்ச் சேர்த்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் தங்கினோம்.
தமிழகத்துக்குப் பெருமை!
இந்திய விடுதலைக்கு முன்பே, இன்றைக்குச் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பே நிறுவப்பட்டு, அனைத்து இந்திய அளவில் மட்டும் அல்ல, தெற்கு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் மாணவர்களை ஈர்த்து, தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துக் கொண்டு இருக்கின்ற கல்வி நிறுவனம்தான் அண்ணாமலைப் பல்கலைக்கழகம். நூற்றுக்கணக்கான ஏக்கர்கள் நிலப்பரப்பில் பரந்து விரிந்து கிடக்கின்றது. பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தங்கிப் படிக்கின்றார்கள்.
அண்மைக்காலமாக வியத்தகு வளர்ச்சியைப் பெற்று வருகின்றது. விருந்தினர் விடுதிக்குச் செல்லும் வழியில் உள்ள சாலைகள் அனைத்தும், காங்கிரீட் சாலைகளாக மாற்றப்பட்டு விட்டன. ஆங்காங்கு, புதிய புதிய கட்டடங்கள் முளைத்து உள்ளன. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மென்மேலும் வளர்ச்சி பெறுவது தமிழனுக்குப் பெருமையே; மகிழ்ச்சிக்கு உரியதே!
அங்கிருந்து புறப்பட்டு, காலை, 9.30 மணி அளவில் பிச்சாவரத்துக்குப் போய்ச் சேர்ந்தேன். நண்பர் எழிலன் உடன் வந்தார். வழியில், பொன்னன் திட்டு, எம்.ஜி.ஆர். திட்டு, என வரிசையாக மீனவர்களின் கிராமங்கள். பிச்சாவரம் நோக்கிச் செல்லுகின்ற சாலையின் இருமருங்கிலும் பனை மரங்கள்.
பிச்சாவரத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பு பார்த்ததற்கு, இப்போது மாற்றங்கள் தெளிவாகத் தெரிந்தன. தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சித் துறை, படகுக் குழாம் அமைத்து இருக்கின்றது. ஏராளமான படகுகள் அணிவகுத்து நிற்கின்றன. ஆனால், படகுக்கான சீட்டு வாங்கும் இடத்துக்குச் சென்று, கட்டண விவரங்களைப் பார்த்தபோது பகீரென்றது. ரூ 500, 1000 என எழுதி இருந்தார்கள். உற்றுப் பார்த்தேன்.
கட்டண விவரம்
8 பேர் கொண்ட மோட்டார் படகு: 6 கிலோ மீட்டர் தொலைவை 40 நிமிடங்களில் கடந்து வரும். அதற்கான கட்டணம் ரூ 1200. தலைக்கு 150 ரூபாய் ஆகின்றது.
ஐந்து பேர் கொண்ட துடுப்புப் படகு: இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு அழைத்துச் சென்று வருவர். இதற்கு ஆகும் நேரம் இரண்டு மணி. கட்டணம் ரூ 350. தலைக்கு 60 ரூபாய் ஆகின்றது.
மோட்டார் படகுகள், அகன்ற கால்வாய்களின் வழியாக மட்டுமே சீறிப்பாய்ந்து, கடற்கரை வரையிலும் சென்று திரும்பும். அதில் பயணித்தால், அலை ஆத்திக் காடுகளின் அழகை, பொறுமையாகப் பார்த்து ரசிக்க முடியாது என்பதை உணர்ந்தேன்.
எனவே, துடுப்புப் படகை வாடகைக்கு எடுத்துக் கொண்டு புறப்பட்டோம். அதுதான் சிறந்தது என்று அங்கே பணி ஆற்றுகின்ற நண்பர் ஒருவரும் தெரிவித்தார். அதே ஊரைச் சேர்ந்த ராஜூ என்ற படகோட்டி வந்தார். படகுப் பயணம் தொடங்கியது.
கண்ணில் விரிந்த காட்சிகள்
இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் அண்ணா வருணித்து இருக்கின்ற காட்சிகள், அப்படியே நம் கண்முன் விரிகின்றன. மரங்களில் அமர்ந்து இருந்த வண்ணவண்ணப் பறவைகள், நமது படகு அருகில் நெருங்கும்போது, சிறகடித்துப் பறக்கின்றன. அத்தகைய நிறங்களிலான பறவைகளை, நான் இதுவரையிலும் பார்த்தது இல்லை.
பிச்சாவரம்
சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான, கமலஹாசனின் ‘தசாவதாரம்’ படத்தின் தொடக்கப் பாடல் காட்சி படம்பிடிக்கப்பட்ட கால்வாய், கரையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு உள்ளேயே இருக்கின்றது, ‘கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது’ என்ற அந்தப் பாடலின் காட்சிளை, பல நாள்களாகப் படம் பிடித்தார்களாம். நிலத்தில் என்றால், ஏணிகளை வைத்து காட்சிகளைப் படம் பிடிப்பார்கள். ஆனால், அந்தப் பாடலின் காட்சிகளைப் பாருங்கள்; மேலே இருந்து எடுத்ததுபோலத் தெரியும். படகுகளில் ஏணிகளை வைத்துப் படம் பிடித்து இருப்பார்கள் என எண்ணினேன்.
படகோட்டியிடம் கேட்டேன். அந்தக் காட்சிகளை எல்லாம், ஹெலிகாப்டரில் இருந்து படம் பிடித்தார்கள். அப்போது, எங்களையெல்லாம் தண்ணீருக்கு உள்ளே விடவில்லை. நாங்கள் எல்லாம் கரையில் நின்றே வேடிக்கை பார்த்தோம்’ என்றார் படகோட்டி ராஜூ.
அதேபோல, பிரபு நடித்த சின்னவர், சரத்குமார் நடித்த சூரியன் ஆகிய படங்களின் சில காட்சிகளையும் இங்கே படம் பிடித்து இருக்கின்றார்கள் என்ற தகவலையும் சொன்னார்.
ஆனால், முதன்முதலாக இந்தப் பகுதியைப் படம் பிடித்து வெள்ளித்திரையில் காண்பித்தவர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள்தாம். 1975 ஆம் ஆண்டு வெளிவந்த இதயக்கனி திரைப்படத்தின் இறுதிக்கட்டக் காட்சிகள், பிச்சாவரம் காடுகளில் படம் பிடிக்கப்பட்டவையே. அது மட்டும் அல்ல, பெரும்பாலும் அரங்குகளிலேயே தமிழ்த் திரைப்படங்கள் படமாக்கப்பட்டு வந்த சூழலில், 1956லேயே நாடோடி மன்னன் திரைப்படத்தின் இறுதிக்கட்டக் காட்சிகளை, கம்பம் அருகே மேற்குத் தொடர்சசி மலையிலும், அடிமைப் பெண் திரைப்படத்தில் ஒகேனக்கல் அருவியின் காட்சிகளையும், ராஜஸ்தான் பாலைவனக் காட்சிகளையும் படம் பிடித்துக் காட்டியவர் எம்.ஜி.ஆர். பின்னர், உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை, கிழக்கு ஆசிய நாடுகளில் படம் பிடித்து, ஜப்பான், சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து நாடுகளின் காட்சிகளைத் தமிழகத்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கினார். பயண ஆர்வத்தை வளர்த்தார். அந்த வகையில் தூண்டப்பட்டுத்தான் நானும், இன்று ஒரு பயண எழுத்தாளராக ஆகி இருக்கின்றேன்.
தொடர்ந்தது படகுப்பயணம்
பிச்சாவரம் கால்வாயில் எங்கள் பயணம் தொடர்ந்தது. சிறிது தொலைவுக்குப் பின்னர், அகன்ற கால்வாயை விட்டு விலகி, இருபுறங்களிலும் மரங்கள் அடர்ந்த குறுகிய ஓடைகளின் வழியாக படகைச் செலுத்தினார் படகோட்டி. இப்போது, துடுப்புப் போடுவதை நிறுத்திவிட்டு, மாங்குரோவ் குறுமரங்களில் இருந்து தொங்கிக் கொண்டு இருக்கின்ற கொடிகளைக் கைகளால் பிடித்து இழுத்துக்கொண்டே முன்னேறுகிறார்.
‘இப்படிப் பிடித்து இழுத்தால், கொடிகள் முறிந்து விடாதா?’ என்று கேட்டேன்.
‘இல்லை. இழுத்தால் ஒடியாது; நார் நாராகத்தான் வரும். உறுதியான கொடிகள் இவை’ என்றார்.
‘இந்தக் கால்வாய்களில் ஆழம் எவ்வளவு இருக்கும்?’
‘படகுகள் நிற்கின்ற இடத்தில் மூன்று நான்கு அடிகளும், கால்வாயின் நடுவே பத்து அடிகள் வரையிலும் இருக்கும். இந்தக் குறுகிய ஓடைகளில், இரண்டு மூன்று அடிகள்தாம் ஆழம் இருக்கும்’ என்றார்.
கடற்ரைகளில் கண்டை மரங்களை வளர்ப்போம்
மாங்குரோவ் செடிகளைத் தவிர்த்து, சிறிய இலைகளைக் கொண்ட குறுமரங்கள் நிரம்பத் தெரிந்தன. அவை, கண்டை மரங்கள் என்றார். இந்தக் கண்டைகளைத்தாம், ‘அலையாத்தி மரங்கள்’ என்று அழைக்கின்றார்கள். தமிழகத்தின் நீண்டி நெடிய கடற்கரை முழுமையிலும் சுனாமி தாக்கியபோதும், ஆழிப்பேரலைகளைத் தடுத்து நிறுத்திப் பாதுகாத்தவை, இந்த அலை ஆத்திக் காடுகள்தாம். அலைகளைத் தடுப்பதால், அலை ஆத்திக் காடுகள். என்ன அழகாக, காரணத்தோடு பெயர் சூட்டி இருக்கிறார்கள்!
இவ்வளவு நாள்களாக, பிச்சாவரம் காடுகள், மாங்குரோவ் காடுகள் என்றே படித்து இருக்கிறேன். ஆனால், உண்மையில், கண்டை மரங்கள்தாம் அலைகளைக் கட்டுப்படுத்துகின்றன என்பதை அங்கே சென்ற பார்த்த பின்புதான் விளங்கிக் கொண்டேன். சுரபுன்னை மரங்களும் உள்ளன.
ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நீண்டு கிடக்கின்ற தமிழகக் கடற்கரையோரங்களில், வாய்ப்பு உள்ள இடங்களில், கண்டை மற்றும் சுரபுன்னை மரங்களை வளர்த்து, அலை ஆத்திக் காடுகளை உருவாக்க வேண்டும்; தமிழகத்தின் காட்டு வளத்தை மேம்படுத்த வேண்டும். சுனாமி தாக்குதலில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ளலாம். ‘வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்’ என்று முழங்குவது போல, ‘கடற்ரைகளில் கண்டை மரங்களை வளர்ப்போம்’ என்ற முழக்கத்தையும் அரசு முன்வைக்க வேண்டும்.
கூடை வலைகள்
எங்கள் படகுப்பயணம் தொடர்ந்தது. சற்றுத் தொலைவில், கடலில் மீன்களைப் பிடிப்பதற்காக வலைகளை விரிப்பதுபோல, இந்தக் கால்வாய்களின் ஓரங்களில், சில மீனவர்கள் நீண்ட நரம்புகளை இறக்கிக் கொண்டே சென்றார்கள். அவை மீன்பிடிப்பதற்காக அல்ல; நண்டுகளைப் பிடிப்பதற்காகப் போடப்படுகின்ற கூடைவலைகள். அருகில் சென்று, ஒரு கூடையை மேலே தூக்கிப் பார்த்தேன். கூடைக்கு உள்ளே, சற்றே பெரிய அளவில் இரண்டு மீன் துண்டுகளைத் தூண்டிலில் மாட்டி வைத்து இருந்தார்கள். அதன் மேல் பகுதி திறந்தே இருந்தது.
pichavaram_370‘இப்படித் திறந்து இருந்தால், நண்டுகள் வெளியேறி விடாதா?’ என்று கேட்டேன்.
‘இல்லை. நண்டுகள், அந்தக் கூடைக்கு உள்ளே இறங்கி உட்கார்ந்து கொண்டு, மீன் துண்டுகளை ஆற அமர பொறுமையாக கடித்துச் சுவைக்கும். ஆனால், மீன்களைப் போலத் தூண்டிலில் நண்டுகளின் வாய் மாட்டிக் கொள்ளாது. இப்போது, இந்தக் கூடைவலைகளைப் போட்டுக் கொண்டே செல்லுகின்ற மீனவர்கள் ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் கழித்து வந்து, மெதுவாக அந்தக் கூடையை மேலே தூக்குவார்கள். அப்போது நண்டுகள் மேலே வந்து வெளியேறிச் செல்ல முயற்சிக்காமல், கூடைக்கு உள்ளேயே, அடியில் உள்ள ஓட்டை வழியாக வெளியே முயற்சிக்கும். ஆனால், அதன் வழியாகச் செல்ல முடியாது, சிக்கிக் கொள்ளும். எனவே, தூண்டில் முள் மாட்டி மீன்களைச் சித்திரவதை செய்வது போல அல்லாமல், மீனவர்கள் நண்டுகளை, எவ்வித வலியும் இல்லாமல் எளிதாகப் பிடித்து விடுவார்கள். ஒரு நாளைக்கு, ஒரு கிலோ முதல் மூன்று கிலோ வரையிலும் நண்டுகளைப் பிடிப்பார்கள். சிதம்பரம் சந்தையில், கிலோ 200 முதல் 300 வரையிலும் போகும்’ என்றார் ராஜூ.
குறுகிய கால்வாய்களின் வழியாக படகு போகும்போது, ஆங்காங்கு மேலும் கிளைக்கால்வாய்களாகப் பிரிந்து சென்றன. இதுபோன்ற இடங்களில் புதியவர்கள் உள்ளே நுழைந்தால், எளிதில் வெளியே வர முடியாது. மாட்டிக் கொண்டு முழிக்க வேண்டியதுதான். ஏற்கனவே இந்தப் பகுதியில் சுற்றிப் பழக்கப்பட்ட படகோட்டிகளின் துணையோடுதான் சென்று வர வேண்டும்.
வழியில் ஓரிடத்தில், தமிழ்நாடு வனத்துறையின் அறிவிப்பு பளிச்சிடுகின்றது:
பிச்சாவரம் சதுப்புநில வனப்பகுதியில், அனுமதிக்கப்பட்ட பகுதிகளைத் தவிர ஏனைய பகுதிகளுக்கு உள்ளே நுழைவது, சுரபுன்னைக் காய்கள், கண்டன் விதைகளைச் சேகரிப்பது மற்றும் வனப்பகுதியில் உள்ள பறவைகளுக்கு இடையூறு செய்தல் ஆகியவை, தமிழ்நாடு வனச்சட்டம் 1882 பிரிவு ஏ உட்பிரிவு 21 டி இ ஆகியவற்றின்படி தண்டனைக்கு உரியதாகும். மீறினால் இரண்டு ஆண்டுகள் சிறையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிச்சாவரம் செல்லுகின்ற சுற்றுலாப் பயணிகள், இதைக் கவனத்தில் கொள்க!
‘மோட்டார் படகுகள் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலுக்கு எத்தனை கிலோ மீட்டர் வரையிலும் செல்லும்?’ என்று கேட்டேன்.
‘இல்லை. இங்கே இருப்பவை அனைத்தும் கேஸ் படகுகள்தாம். ஒரு சிலிண்டருக்கு 30 கிலோ மீட்டர்கள் வரையிலும் செல்லும்’ என்றார் ராஜூ. படகுகள், கேஸ் சிலிண்டர்களைக் கொண்டு இயக்கப்படுவதை இங்கேதான் முதன்முதலாகப் பார்த்தேன். அதுவே எனக்குப் புதிய செய்தியாக இருந்தது.
பிச்சாவரம் படகுக் குழாமுக்கு எதிரில் உள்ள ஒரு சிறிய தீவில், தங்கும் விடுதிகளைக் கட்டி இருக்கிறார்கள். ஆனால், அவை அவ்வளவாகப் பிரபலம் ஆகவில்லை. எனவே, பராமரிக்காமல் விட்டுவிட்டார்கள். பாதுகாப்பான பயணத்துக்கு, மிதவைகள் வழங்குகின்றார்கள். அவற்றை அணிந்து கொள்ள வேண்டும்.ஆனால், இங்கே படகு விபத்துகள் ஏதும் நிகழ்ந்தது இல்லையாம்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஊரிலும், பொங்கலுக்கு மறுநாள், ஆற்றோரங்களில்,குளத்தங்கரைகளில் மக்கள் கூடுவார்கள். கரும்பு, பனங்கிழங்கு கடித்துச் சுவைப்பார்கள். அதுபோல, ஒவ்வொரு கிராமத்திலும், குலதெய்வ வழிபாட்டுத் திருவிழாக்கள் நடைபெறும். அதுபோல, சிதம்பரம் பகுதி மக்கள், பிச்சாவரம் படகுப் பயணத்துக்கும், கடற்கரைக்கும் வருகின்றார்கள் என்றார் உடன் வந்த நண்பர் எழிலன்.
சுற்றுலாவை வளர்க்க..
பிச்சாவரத்தைப் போலவே உப்பங்கழிகள் அமைந்து உள்ள கேரள மாநிலத்தில், படகு வீடுகளை அமைத்து, உலக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றார்கள்.
அண்மையில், பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த என் தமிழகத்து நண்பர், தம்முடன், நான்கு ஈழத்தமிழர்களையும் அழைத்து வந்து இருந்தார். அவர்கள், அங்கிருந்தே, படகு வீடுகளில் தங்குவதற்காக இணையத்தில் முன்பதிவு செய்து இருந்தார்கள். சென்னையில் இருந்து கேரளாவுக்குத் தொடர்வண்டியில் சென்று, படகு வீடுகளில் தங்கினார்கள். அந்த அனுபவம் மிகவும் இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது என்று சொன்னார்கள்.
அதுபோல, பிச்சாவரம் போன்ற தமிழகக் கடல் பகுதிகளில், படகு வீடுகளைக் கட்டி சுற்றுலாவை மேம்படுத்தலாம். சுற்றுப்புறச் சூழலுக்குக் கேடு இன்றி, சுற்றுலாவை வளர்ப்பதற்கு ஏற்ற இடமாக பிச்சாவரம் திகழ்கின்றது. சொல்லப்போனால், தமிழகத்தின் மலை வாழிடங்களில் உள்ள ஏரிகளில், ஒரு குறுகிய வட்டத்துக்குள்தான் படகுப்பயணம் செய்ய முடியும். ஆனால், பிச்சாவரத்தில், சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவுக்குப் படகுகளில் பயணித்து மகிழலாம்.
பிச்சாவரம் அலை ஆத்திக் காடுகளின் அழகை, அண்ணா வருணிப்பது போல வருணிக்க என்னால் இயலாது. நான் பார்த்த காட்சிகளை இரண்டரை நிமிட வீடியோ தொகுப்பாக, எனது முகநூல் பக்கத்தில் (arunagiri sankarankovil)பதிவு செய்து உள்ளேன். ஏற்கனவே கண்டு ரசித்த பலர், தாங்கள் எடுத்த ஒளிப்படங்களை, ‘Youtube’ இணையதளத்தில் உலவ விட்டுள்ளனர். நீங்களும் பார்த்து ரசியுங்கள். நேரிலும் கண்டு அனுபவியுங்கள்.
ஒருமுறை துடுப்புப் படகிலும், ஒருமுறை மோட்டார் படகிலும் பயணித்துப் பார்த்தால், பிச்சாவரத்தின் அழகை, முழுமையாகக் கண்டு ரசிக்கலாம்!
- அருணகிரி ( writerarunagiri@gmail.com)

Aucun commentaire:

Enregistrer un commentaire

ANY ERROR SHOULD BE INFORMED BY EMAIL