ஜாதி இல்லாத ஒரு சமூகம் உருவாக வேண்டும் என நான் நினைக்கிறேன்
தருமபுரி சாதி வெறியாட்டத்திற்கு திவ்யா
இளவரசன் இணையரின் சாதி மறுப்பு காதல் திருமணம் ஒரு முக்கியக் காரணம்.
எல்லாம் முடிந்து ஓராண்டாகும் நிலையில் இவ்விருவரையும் பிரித்துவிடத்
துடிக்கிறார்கள், தருமபுரியில் வெறியாட்டம் போட்ட அதே ஜாதி இந்துக்கள்.
அதற்கு நீதிமன்றத்தின் துணையையும் நாடி, தற்பொழுது இவ்விணையரை
தற்காலிகமாகப் பிரித்தும் விட்டனர். சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஏப்ரல்
5, 2013 அன்று இளவரசனுடன் வந்திருந்த திவ்யா, வழக்குரைஞர் ரஜினிகாந்த்
முன்னிலையில் "தலித் முரசு'க்கு அளித்த வாக்குமூலத்தில் (திவ்யா அளித்த
வாக்குமூலத்தின் ஒலி வடிவம் நம்மிடம் உள்ளது) இருந்து சில முக்கியப்
பகுதிகளை மட்டும் இங்கு வெளியிடுகிறோம்."காதல் நாடகம்' என்று பழிசுமத்தி,
ஜாதி அரசியல் நாடகம் நடத்துபவர்கள் யார் என்ற கேள்விக்கு இந்த வாக்குமூலமே
பதிலடியாக அமைந்திருக்கிறது.
சந்திப்பு : மீனாமயில்
தருமபுரி மாவட்டம் மாரவாடி
அஞ்சலுக்குட்பட்ட செல்லங்கொட்டாய் என் சொந்த ஊர். அப்பா நாகராஜ், நாயக்கன்
கொட்டாயில் உள்ள கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்தார். அம்மா தேன்மொழி; தம்பி
மணிசேகர். செம்மாந்தங்குப்பத்தில் உள்ள கார்மல் மெட்ரிகுலேஷன் பள்ளியில்
எட்டாம் வகுப்பு வரை படித்து, கோனாயக்கனள்ளியில் உள்ள அரசு பெண்கள்
மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பை முடித்தேன். சோகத்தூர் ஓம்சக்தி
நர்சிங் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் மூன்றாமாண்டு படித்துக்
கொண்டிருந்த போதுதான் என் காதல் திருமணம் ஊரை சூறையாடக் காரணமாக அமைந்தது.
கல்லூரிக்கு பேருந்தில் செல்லும் போது
இளவரசனோடு பேசத் தொடங்கினேன். அவர் என்னை விரும்புவதாகச் சொன்ன போது,
நீங்களும் நானும் வேறு வேறு சாதி; நான் சம்மதித்தாலும் என் வீட்டில்
சம்மதிக்க மாட்டார்கள் என்று கூறித் தயங்கினேன். ஆனால் அவரை எனக்கு
பிடித்திருந்தது. என் வீட்டிற்காகத்தான் அவரது காதலை நான் ஏற்கவில்லை என
அவருக்கு தெரிந்தது. நான்கு மாதங்கள் கழித்து அவரை விரும்புவதாக நானும்
கூறினேன். பேருந்திலும் பேருந்து நிறுத்தத்திலும் நாங்கள் சந்தித்து பேசும்
தகவல் பரவி, அது என் அப்பாவின் காதிற்கும் வந்து சேர்ந்தது. "குட்டி' என்ற
வார்த்தையைத் தவிர வேறெதுவும் சொல்லாத என் அப்பா என்னை மிரட்டவில்லை,
அடிக்கவில்லை, கண்டிக்கவில்லை; அறிவுரை கூறினார். இளவரசனையும் அழைத்து
அறிவுரை கூறினார். அப்பாவை கஷ்டப்படுத்த வேண்டாமென நானும் உடனே விடுதியில்
சேர்ந்துவிட்டேன். இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வரும்போது
மட்டும் இளவரசனை பார்த்துப் பேசுவது என எங்கள் சந்திப்பை குறைத்துக்
கொண்டேன்.
ஆனாலும் அவசர அவசரமாக எனக்கு திருமண
ஏற்பாடு நடந்தது. சென்னை கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் ராஜகோபால்
என்ற உறவுக்காரர் ஒரு வார இறுதி நாளில் என்னைப் பெண் பார்க்க வந்தார்.
இப்போதைக்கு திருமணம் வேண்டாமென நான் எவ்வளவோ மறுத்தும் அம்மா அதை காதில்
போட்டுக் கொள்ளவில்லை. எனவே, இந்த வரனை அழைத்து வந்திருந்த என் பெரியம்மாள்
மகளை தொலைபேசியில் அழைத்து எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று
கூறினேன். ஆனால், அவள் என் அப்பாவிடம் இது குறித்து புகார் கூறிவிட்டாள்.
இவரை திருமணம் செய்ய முடியாது என்றால் நீ இளவரசனையும் திருமணம்
செய்யக்கூடாது என்று என் அப்பா என்னிடம் சத்தியம் வாங்கினார். ஆனாலும்
எனக்கு தெரியாமலேயே எனது திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திரைமறைவில் நடந்த
விஷயங்கள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கின.
8.10.2012 அன்று இளவரசனை தொலைபேசியில்
அழைத்து அழுதேன். நான் கல்லூரி செல்லும் வழியிலிருந்து என்னை அழைத்துக்
கொண்டு திருப்பதிக்குச் சென்றார். எங்கள் திருமணம் எந்த திட்டமிடலும்
இல்லாமல் நெருக்கடியில்தான் நடந்தது. அப்போதும் கூட இந்த பிரச்சனை ஒரு
பத்து நாளில் சரியாகிவிடும்; கல்லூரிப் படிப்பை இருவருமே தொடரலாம்
என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால், இப்படியொரு சமூகப் பிரச்சனையாக இது
மாறும் என நாங்கள் நினைத்துப் பார்க்கவில்லை. என் அப்பா காதலுக்கு
எதிரானவர் இல்லை. என் அம்மாவை அவர் காதலித்துதான் மணம் முடித்தார். என்
உறவுமுறையில் நடந்த பல காதல்களை அவர் அங்கீகரித்திருக்கிறார். என்
காதலிலும் அதுவே நடக்கும் என நான் நினைத்தேன். எனக்கு அறிவுரை கூறும்
போதெல்லாம் என் அப்பா திரும்பத் திரும்பச் சொன்ன ஒரே விஷயம், நான் ஏற்றுக்
கொண்டாலும் உன் காதலை இந்த சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது. என் அண்ணன் தம்பிகள்
ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இளவரசன் பக்கத்து ஊர் என்பதுதான் என்
பிரச்சனை. இதே சாதி பையன் தூரத்தில் ஏதாவது ஊரைச் சேர்ந்தவன் என்றால்
எப்படியாவது சமாளித்துவிடுவேன் என்பதுதான்.
என் திருமணம் அப்பாவின் குடிப்பழக்கத்தை
அதிகப்படுத்தியதை அம்மா எனக்கு தொலைபேசியில் கூறினார். தினமும் ஏதோ ஒரு
கும்பல் வீட்டு முன் வந்து நின்று அப்பாவை மிரட்டுவதாகவும், உன் மகளை
நீதான் அனுப்பி வச்சியா? உன் மகளை அனுப்பி வச்சுட்டு இன்னும் ஏன் சாகாம
இருக்க? என்று திட்டியதாகவும் சொன்னார். என் மேல் அப்பாவுக்கு கோபம்
இருந்தது உண்மைதான் என்றாலும் அம்மாவையும் தம்பியையும் கை விட்டு தற்கொலை
செய்யும் எண்ணம் அவருக்கு இல்லை. என் அப்பா எந்த சாதி சங்கத்திலும் இல்லை.
தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவர் கோழை இல்லை. மூன்று காலனிகளுக்கு
நடுவில்தான் என் அப்பாவின் அலுவலகம் இருந்தது. என் அப்பாவின் சாவை தற்கொலை
என நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
திருமணம் முடிந்து ஒரு மாதம் கழிந்திருந்த
நிலையில், கடந்த நவம்பர் 5 ஆம் தேதி என் குடும்பத்தினர் சமரசம் பேசி என்னை
அழைத்துச் செல்ல தொப்பூர் என்ற இடத்திற்கு வந்தனர். இவர்கள் எல்லோரையும்
அனுப்பி வைத்துவிட்டு அப்பா பைக்கில் வருவதாகக் கூறியிருந்தார். ஆனால் அவர்
வரவில்லை. என் குடும்பத்தினர் வீடு போய் சேர்வதற்குள் அப்பா இறந்துவிட்ட
செய்தி இளவரசனுக்கு வந்துவிட்டது. வீட்டிற்குச் சென்று அம்மா பார்த்தபோது,
தூக்குப் போட சாத்தியமில்லாத அறையில் அப்பா நின்ற நிலையில் தூக்கில்
தொங்கிக் கொண்டிருந்தார். கதறி அழுத அம்மாவை பொருட்படுத்தாமல் அப்பாவின்
பிணத்தை கயிற்றுக் கட்டிலில் போட்டு தூக்கிக் கொண்டு போனது ஒரு கும்பல்.
என் பெரியப்பா முறையில் வரும் முருகன் என்பவர், அம்மாவை அப்பாவின்
சடலத்துக்கு அருகே நெருங்கவிடவில்லை. என் அப்பாவின் மரணம் திடீரென நடந்த
தற்கொலை என்றால், வெறும் 50 குடும்பங்களே உள்ள எனது ஊரிலும், வெறும் 20 30
குடும்பங்களே உள்ள பக்கத்து ஊரிலும் இருந்து எப்படி ஆயிரக்கணக்கானவர்கள்
கூடி, எஸ்.சி. மக்கள் வசிக்கும் நாயக்கன் கொட்டாயை சூறையாடினார்கள் என்பது
இன்னும் எனக்கு புரியவில்லை.
தங்களால் தான் இவ்வளவு பெரிய கலவரம்
நடந்தது என்ற வருத்தத்தில் இளவரசன் குடும்பத்தினர் தற்கொலை செய்து கொள்ள
முடிவு செய்தனர். ஆனால், எனக்கு தற்கொலையில் விருப்பமில்லை. நடந்த
சம்பவங்களுக்கு நான் பொறுப்பில்லை. என் அப்பா என்மீது வைத்த அன்பு
உண்மையென்றால் அவர் என்னை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால்
என்மீது கோபமாகவே இருந்திருக்க வேண்டும். மாறாக, அவர் செத்து அந்த பழியை
என் மேல் சுமத்தினால் எப்படி? தற்கொலை செய்ய விருப்பமில்லாமல் காவல்
நிலையத்திற்கு சென்றேன். எஸ்.பி. சார் என்னையும் இளவரசனையும் பாதுகாப்பு
கருதி சென்னை அனுப்பி வைத்தார்.
இதற்கிடையே அம்மா என்னிடம் தொலைபேசியில்
பேசிக் கொண்டிருந்தார். "இதுக்கு மேல உன்னை அங்க இருந்து பிரிச்சுக் கொண்டு
வந்து வாழ வைக்க முடியாது. தனியாகவும் உன்னை விட முடியாது. அதனால் என்னால
முடிஞ்ச உதவியை செய்றேன். வாய்ப்பு கிடைக்குறப்போ வந்து பாக்குறேன்.
மத்தவங்க உன் மேல கோபமா இருக்காங்க. நான் அப்படி உன்னை விட்டுட முடியாது'
என அக்கறையாகப் பேசுவார். சென்னையில் இருக்கும் போது, "இப்போதைக்கு நான்
உன்னை பார்க்க வர முடியாது. நான் உன்கூட பேசுறது தெரிஞ்சாலே பிரச்சனை
ஆகும். அங்க ஏதாவது பிரச்சனையா?' என கேட்டார்கள். "வீட்டுக்குள்ளேயே
அடைஞ்சுகிடக்குறேன்' என பேச்சுவாக்கில் சொல்ல, என் மகளை அடைத்து வைத்து
கொடுமைப்படுத்துவதாக அம்மா கேஸ் போட்டுவிட்டார்.
ஒருநாள் எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து
இளவரசனுக்கு தொலைபேசியில் பேசி மகளை பார்க்க வேண்டுமெனக் கேட்டார்.
இளவரசனும் போய் பார்த்துவிட்டு வா என்றார். ஆனால், என் அம்மா பா.ம.க. வை
சேர்ந்த டாக்டர் செந்தில் வீட்டிற்கு என்னை வரச் சொன்னதும் நாங்கள் போக
வேண்டாம் என முடிவெடுத்துவிட்டோம். என் அம்மா தனியாக இல்லை. என் அப்பாவை
போலவே என் அம்மாவும் யாருக்கோ பயப்படுகிறார். யாரோ அவரை இப்படி செய் அப்படி
செய் என மிரட்டுகின்றனர். அம்மாவிடம் கேட்டால் சொல்ல மறுக்கிறார்.
எனக்கு என் அம்மாவும் வேண்டும். இளவரசனும்
வேண்டும். அது எப்படி சாத்தியம் என எனக்குத் தெரியவில்லை. சாதி இல்லாத ஒரு
சமூகம் உருவாக வேண்டும் என நான் நினைக்கிறேன். ஆனால், அது உருவாகும் என்ற
நம்பிக்கை எனக்கு இல்லை. வீட்டுக்கு தெரியாமல் காதல் திருமணம் பண்ணியதை
நான் என் தனிப்பட்ட வாழ்க்கையாகத்தான் பார்க்கிறேன். அதை ஏன் இவர்கள்
சமூகப் பிரச்சனையாக்குகின்றனர்? அரசியல்வாதிகள் மட்டுமல்ல, யார் ஜாதிவெறி
பிடித்து அலைந்தாலும் அவர்களுக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். அவரவரின்
வாழ்க்கையை மட்டும் வாழுங்கள்; அடுத்தவரின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள்
நுழையாதீர்கள்.
இப்போதைக்கு என்னுடைய பயம் ஒன்றே
ஒன்றுதான். என்னைச் சுற்றி இருக்கும் சாதியால் நானும் சாதியை நம்பிவிடுவேனோ
என பயப்படுகிறேன். நான் இளவரசனை வேறு ஆளாக எப்போதும் நினைக்கவில்லை. ஆனால்
பயமாக இருக்கிறது. எல்லோரும் இதை ஒரு சமூகப் பிரச்சனையாகப்
பார்க்கும்போது, அந்த சமூகமே தேவையில்லை என்று தோன்றுகிறது. தினமும் இரவு
உறங்கப் போவதற்கு முன் எத்தருணத்திலும் இளவரசனிடம் வித்தியாசம்
பார்த்துவிடக் கூடாது என எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்.
Aucun commentaire:
Enregistrer un commentaire
ANY ERROR SHOULD BE INFORMED BY EMAIL